உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் !: அனைத்து கட்சி ஆதரவு பெற அரசு திட்டம்

பஹல்காம் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் !: அனைத்து கட்சி ஆதரவு பெற அரசு திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக விவாதிக்க, பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், கடந்த 22ல் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர். இதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் ரத்து, துாதரக உறவு முறிப்பு என, பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆதரவு

பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அனைத்துக் கட்சி கூட்டத்தையும் மத்திய அரசு நடத்தியது.இதில் பங்கேற்ற காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும், இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளன.இதற்கிடையே, முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜ்யசபா சுயேச்சை உறுப்பினருமான கபில் சிபில், 'இந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, ஆலோசனை கூறினார். அவரது இந்த கோரிக்கையை, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சியின் ஆதரவு மற்றும் நாட்டின் பாதுகாப்பில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை பறைசாற்றும் வகையில், சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது குறித்து ஆராயப்படுகிறது.'நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் எப்போதும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவை பிரதமர் விரும்புகிறார். அதன்படி, பாகிஸ்தானுக்கு எதிராக நாட்டின் ஒற்றுமையை காட்ட இந்தக் கூட்டத் தொடரை நடத்த அரசு தயாராக உள்ளது' என, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

முழு அதிகாரம்

இதற்காக, பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தை நடத்தி, அதில் முடிவு எடுக்க வேண்டும். ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும். அதனால், குறுகிய காலத்துக்குள் பார்லிமென்ட் கூட்டத் தொடரை நடத்த முடியும்.இதற்கு முன், 1962ல், சீனாவுக்கு எதிரான போரின்போது, அப்போது பிரதமராக இருந்த காங்கிரசின் ஜவஹர்லால் நேரு, இதுபோல் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளதையும், அந்த தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஐரோப்பிய நாடான இத்தாலியின் வாட்டிகன் நகருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றுள்ளார்.அவர் நாடு திரும்பியதும், பார்லிமென்ட் கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.'பயங்கரவாதத்துக்கு எதிராக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருவதாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூறியுள்ளனர். பார்லிமென்டில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றும்போது, அரசுக்கு முழு அதிகாரம் கிடைக்கிறது. 'மேலும், இது பாகிஸ்தான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் எச்சரிக்கையாக அமையும்' என, சிறப்பு கூட்டத்தை நடத்துவதற்கான காரணம் குறித்து, பா.ஜ., தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை