ஒரே இடத்தில் காணும் ஸ்ரீதுவாதச ஜோதிர்லிங்க கோவில் ஜோதிர் லிங்கங்கம்
பெங்களூரில் இரண்டாவது உயரமான இடமாக இருப்பது ஓம்கார் மலை. இந்த மலையில் உள்ளது ஸ்ரீதுவாதச ஜோதிர்லிங்க கோவில். கர்நாடகாவில் உள்ள அற்புதமான, பிரமாண்ட கோவில்களில் இதுவும் ஒன்று.நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் மூல பூரணிக ஜோதிர்லிங்கத்தின் 12 பிரதி ஜோதிர்லிங்கங்கள், இந்த கோவிலில் உள்ளன. ஜோதிர்லிங்கங்கள் மிகவும் புனிதமானவை மற்றும் சாதாரண சிவலிங்கங்களில் இருந்து வேறுபட்டவை.ஒரு ஜோதிர்லிங்கத்தை தரிசரித்தால் கூட மோட்சம் பெற வழிவகுக்கும் என்று சொல்வர். சிவபுராணத்தில் 12 ஜோதிர்லிங்கத்தின் பெயர்களும் இருப்பிடங்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன. ஆரோக்கியம், செல்வம் தேவைப்படும் ஒவ்வொரு பக்தரும், ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரம்மலீன சத்குரு ஸ்ரீசிவபுரி மஹா சுவாமிகளால் இந்த கோவில் கட்டப்பட்டது.ஜோதிர்லிங்கத்தின் முக்கியத்துவம், தனித்துவம் பற்றி இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கும் இந்த கோவில் சான்றாக உள்ளது.பிரதான கோவில் உள்ளே 12 ஜோதிர்லிங்கங்களுடன் வித்யாகணபதி, சுப்பிரமணியர், காலபைரவர், சண்டிகேஸ்வரர், பஞ்சலோக நடராஜர் சிலைகள் உள்ளன. ஜோதிர்லிங்கங்களில் ஓம்காரேஸ்வரா லிங்கம் 6 அடி உயரம் கொண்டது. தென், வடமாநில சிற்ப கலைக்கு எடுத்துகாட்டாக கோவில் உள்ளது. ஸ்ரீமாதா வன துர்கா, ஸ்ரீநாகதேவதை சன்னிதிகளும் உள்ளன.நாட்டின் மிக பெரிய, கனமான மணிகளில் ஒன்றாக 1,200 கிலோ எடையில், வெண்கல மணி உள்ளது.
ருத்ராபிேஷகம்
தினமும் காலை 7:00 முதல் காலை 8:00 மணி வரை அனைத்து ஜோதிர் லிங்கங்களுக்கும் ருத்ராபிஷேகம் நடக்கும். பக்தர்கள் ருத்ராபிஷேகம் செய்ய 150 ரூபாய் கட்டணம். திங்கள் முதல் சனி வரை காலை 7:00 முதல் மதியம் 12:30 மணி வரையிலும்; மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும். - நமது நிருபர் -