ஓக்லா கல்லுாரி புனரமைப்பு பணிகள் நிதி ஒதுக்கீடுக்கு காத்திருக்கும் மாநில அரசு
புதுடில்லி:'ஓக்லாவில் உள்ள ஜி.பி.பந்த் இன்ஜினியரிங் கல்லுாரியை புதுப்பிக்க, நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்' என, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறினார். டில்லியில் உள்ள ஓக்லா நகரில், ஜி.பி.பந்த் இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரியில், பல புனரமைப்பு திட்டங்களை செயல்படுத்த, மாநில பொதுப்பணித்துறை திட்டமிட்டது. ஆனால், அதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. அந்த வளாகத்தில் மானாவாரியாக மரங்கள் வெட்டப்பட்டதால், மத்திய அரசு நிதி ஒதுக்காமல் உள்ளது. இந்த கல்லுாரியின் புனரமைப்பு திட்டங்களுக்கு, 2019ல் மாநில அரசு ஒப்புதல் அளித்தது. 426 கோடி ரூபாய் செலவில், 22 ஏக்கர் நிலத்தில் புனரமைப்பு திட்டங்கள் திட்டமிடப்பட்டன. இரண்டு கட்டங்களாக இந்த புனரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டது. எனினும், அந்த வளாகத்தில் உள்ள மரங்கள், வெட்டப்பட்டதை சுட்டிக் காட்டி, நிதி ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசு முன்வரவில்லை. இதனால், அந்த திட்டங்கள் முடங்கிஉள்ளன. எனவே, 'மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் போது, ஜி.பி.பந்த் வளாக திட்டங்கள் செயல்படுத்தப்படும்' என அரசு தெரிவித்துள்ளது.