உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டத்தை கையில் எடுக்க மாநில அரசுகளுக்கு... அதிகாரம் இல்லை! புல்டோசர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி

சட்டத்தை கையில் எடுக்க மாநில அரசுகளுக்கு... அதிகாரம் இல்லை! புல்டோசர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடில்லி: 'குற்ற வழக்கில் சிக்கியதாலேயே ஒருவருடைய வீட்டை, 'புல்டோசர்' வாயிலாக இடிக்க முடியாது. அரசு நிர்வாகத்துக்கு இந்த அதிகாரம் இல்லை. ஒருவர் குற்றவாளியா என்பதை நீதிமன்றங்களே முடிவு செய்ய முடியும். அதில், மாநில அரசுகள் தலையிடக் கூடாது. விதிகளை மீறி கட்டடங்களை இடிக்கும் அதிகாரிகளிடம் இருந்து, அதை திரும்ப கட்டுவதற்கான தொகையை வசூலிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குற்ற வழக்குகளில் சிக்குவோரின் வீடுகள், புல்டோசர் வாயிலாக இடிக்கும் நடைமுறை, உத்தர பிரதேசம், டில்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெகுவாக உள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை கடந்த மாதம் ஒத்திவைத்தது.

வாழ்நாள் கனவு

இந்த வழக்குகளில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, நேற்று விரிவான உத்தரவை பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:சொந்த வீடு என்பது ஒருவருடைய வாழ்நாள் கனவு. அது வெறும் கட்டடம் அல்ல. ஒருவருடைய வாழ்நாள் போராட்டம், கனவு, எதிர்கால பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவு, தங்குவதற்கான பாதுகாப்பான இடம் என்ற உரிமையை வழங்குகிறது.குற்ற வழக்கு ஒன்றில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதாலேயே, ஒருவருடைய வீட்டை இடிப்பது, அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல். இது, அந்த வீட்டில் வசிக்கும் அந்த தனிநபரின் குடும்பத்தாரின் உரிமைகளை, பாதுகாப்பை பறிப்பதாகவே அமையும்.குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதாலேயே அவர் குற்றவாளி என்பதை அரசு நிர்வாகம் எப்படி முடிவு செய்ய முடியும்? இது நீதித் துறைக்கு உட்பட்டது. நீதிமன்றங்களே முறையாக விசாரித்து, அவர் குற்றவாளியா என்பதை தீர்மானிக்கும். அரசியலமைப்பு சட்டத்தில், அரசு நிர்வாகம் மற்றும் நீதித் துறைக்கு என, தனித்தனி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகார துஷ்பிரயோகம்

ஒருவர் சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், அதை தடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அரசு நிர்வாகமே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, சட்டம் - ஒழுங்கை மீறலாமா? அரசு அதிகாரிகள் தங்களை நீதிபதிகளாக நினைத்து, எந்த விசாரணையும் நடத்தாமல், தண்டனை வழங்குவதாகவே இந்த புல்டோசர் நடவடிக்கை உள்ளது.வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டாலும், நிரூபிக்கப்பட்டாலும், தண்டனை பெற்றவராக இருந்தாலும், அவர்களுக்கும் மற்றவர்களுக்கு உள்ளது போன்ற உரிமைகள் உள்ளன. உரிய வாய்ப்புகள் அளிக்காமல், முறையாக விசாரிக்காமல், அரசு அதிகாரிகள் தங்களிடம் அதிகாரம் உள்ளது என்பதற்காக, வீடுகளை இடிக்கக்கூடாது. அது அதிகார துஷ்பிரயோகம்.இதனாலேயே, அரசு நிர்வாகத்துக்கு என சில அதிகாரங்களும், நீதித் துறைக்கு சில அதிகாரங்களும் வழங்கி, அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.வழக்கில் ஒருவர் சிக்கும்போது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அவருடைய வீட்டை அதிகாரிகள் இடிக்கின்றனர். ஆனால், அதற்கு அருகிலேயே இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்படுவதில்லை.

ஊர்ஜிதம்

இதில் இருந்து, தண்டனை அளிக்க வேண்டும் என்ற நோக்கோடு அரசு அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுக்கின்றனர் என்பது ஊர்ஜிதமாகிறது. எவ்வித விசாரணையும் இல்லாமல், வாய்ப்புகள் தரப்படாமல், தண்டனை வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கோ, அதிகாரிகளுக்கோ அதிகாரம் இல்லை.இவ்வாறு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, கட்டடங்களை புல்டோசர் வாயிலாக இடிக்கும் அதிகாரிகளே அதற்கு பொறுப்பாவர். இவ்வாறு விதிகளை மீறி இடிக்கும் அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து, அந்தக் கட்டடத்தை திரும்பக் கட்டுவதற்கான செலவை வசூலிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எப்போது இடிக்கலாம்?

புல்டோசர் நடவடிக்கைகள் எடுக்க முடியாது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ஆக்கிரமிப்பு, அனுமதி பெறாத, சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பதற்கு சில வழிகாட்டுதல்களையும் வகுத்துள்ளது.l அனுமதி பெறாமல் கட்டப்பட்டது என்று அடையாளம் காணப்படும் கட்டடங்களுக்கு, விளக்க நோட்டீஸ் வழங்க வேண்டும். கட்டட உரிமையாளருக்கு, பதிவு தபாலில் அதை அனுப்ப வேண்டும். அந்த கட்டடத்திலும் ஒட்டலாம். பதில் அளிப்பதற்கு, 15 நாட்கள் அவகாசம் தர வேண்டும்l அந்த நோட்டீசில், எந்த வகையில் விதி மீறப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். கட்டடத்தை இடிப்பதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும்l அந்த கட்டடத்தின் உரிமையாளர் விளக்கம் அளிப்பதற்கான தேதியை நிர்ணயித்து, அதற்கு வாய்ப்பு தர வேண்டும்l உரிமையாளர் அளித்த பதிலில் திருப்தி இல்லாத பட்சத்தில், வீட்டை இடிப்பதற்கான நோட்டீஸ் தர வேண்டும். அதற்கு, 15 நாட்கள் அவகாசம் தர வேண்டும்l மேல்முறையீட்டு அமைப்பு தடை விதிக்காத நிலையில், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்கலாம்l நீதிமன்றங்களால் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தால், கட்டடத்தை இடிக்கக் கூடாதுl கட்டடத்தை அதன் உரிமையாளரே அகற்ற வாய்ப்பு தர வேண்டும். அவ்வாறு செய்யப்படாத நிலையிலேயே, அதிகாரிகள் அதை அகற்றலாம்l கலெக்டர் மற்றும் மாவட்ட நீதிபதிக்கு உரிய தகவல்கள் தெரிவிக்க வேண்டும்l கட்டடம் இடிக்கப்படுவதை, வீடியோ பதிவாக எடுத்து பத்திரப்படுத்த வேண்டும்l அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும், இது தொடர்பான டிஜிட்டல் வசதிகள் இருக்க வேண்டும். விளக்க நோட்டீஸ் அளித்தது, உரிமையாளருக்கு வாய்ப்பு தரப்பட்டது, கட்டடத்தை இடிக்க பிறப்பிக்க உத்தரவு உட்பட அனைத்தும் அதில் இடம் பெற வேண்டும். அதுபோல, கட்டட உரிமையாளர்கள் பதில் அளிக்கவும் அதில் வாய்ப்பு தர வேண்டும்l இந்த நடைமுறைகளை மற்றும் விதிகளை மீறும் அதிகாரிகளே, அதற்கு பொறுப்பாவர். அவர்களிடம் இருந்து அதற்கான தொகையை வசூலிக்க வேண்டும்.l இந்த நடைமுறைகளை மீறுவது, நீதிமன்ற அவமதிப்பாகவும் பார்க்கப்படும்l அதே நேரத்தில், சாலைகள், நடைபாதைகள், ரயில் பாதைகள், நீர் வழித்தடங்கள் போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு இவை பொருந்தாது. அதில், சட்டத்துக்கு உட்பட்டு, அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ