வெளிநாட்டு பயிற்சியாளர்களை பதம் பார்த்த தெரு நாய்கள்
புதுடில்லி:ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை நாய்கள் கடித்ததால், அவற்றைப் பிடிக்க நான்கு குழுக்களை டில்லி மாநகராட்சி அமைத்துள்ளது. இதுகுறித்து, டில்லி மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: டில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் சர்வதேச பாரா தடகள விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இங்கு தங்கியுள்ளனர். மைதானத்துக்குள் நுழைய 21 வாயில்கள் உள்ளன. அவற்றின் வழியாக தெரு நாய்களும் மைதானத்துக்குள் நுழைந்து விடுகின்றன. கென்யா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த இரண்டு பயிற்சியாளர்களை நேற்று முன் தினம் நாய்கள் கடித்தன. இருவருக்கும் சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மைதானத்துக்குள் திரியும் தெரு நாய்களைப் பிடிக்கவும், மேலும் நாய்கள் நுழையாமல் தடுக்கவும் நான்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, செப்டம்பர் 25ம் தேதி முதல் இதுவரை 22 தெருநாய்கள் மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார். டில்லியில் தெரு நாய்கள் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 11ம் தேதி தாமாக முன் வந்து விசாரித்த போது, டில்லி மாநகரில் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22ம் தேதி இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி செலுத்தி அதைப் பிடித்த இடத்திலேயே விடுமாறு உத்தரவு பிறப்பித்தது. மேலும், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் ஆக்ரோஷமான நாய்களை மட்டும் காப்பகங்களில் அடைக்க அறிவுத்தியது.