மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்
லே: லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி, லே மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.கடந்த 2019 ஆகஸ்டில், ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அம்மாநிலத்தை, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதில், ஜம்மு - காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட நிலையில், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, கடந்த ஜன., 23ல், கார்கில் ஜனநாயகக் கூட்டணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின்படி பழங்குடியினர் அந்தஸ்து; உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு; லே மற்றும் கார்கிலை, லோக்சபா தொகுதியாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, லடாக்கின் லே மாவட்டத்தில் நேற்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். லே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ளூர் மக்கள் பேரணிகளில் பங்கேற்றனர். அப்போது, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து, கார்கில் ஜனநாயகக் கூட்டணியின் சட்ட ஆலோசகர் ஹாஜி குலாம் முஸ்தபா கூறுகையில், ''ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியாக, லடாக் இருந்த போது, சட்டசபையில் 4 எம்.எல்.ஏ.,க்களும்; இரு எம்.எல்.சி.,க்களும் இருந்தனர். ''ஆனால், தற்போது எங்களுக்கு சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லை. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதே எங்களது பிரதான கோரிக்கை,'' என்றார்.