துப்பாக்கி குண்டு பாய்ந்து மாணவர் பலி
கன்சாஸ்: தெலுங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஆர்யன் ரெட்டி, 23; இவர், அமெரிக்காவின் அட்லான்டா பகுதியில் உள்ள கன்சாஸ் மாகாண பல்கலையில் முதுநிலை அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள ஆர்யன் ஜார்ஜியா பகுதியில், தான் தங்கியிருந்த வீட்டில் நண்பர்களுடன் தன் பிறந்த நாளை கடந்த 13ம் தேதி கொண்டாடினார். அப்போது, அவரது நண்பர்கள் ஒரு அறையில் இருந்தனர். மற்றொரு அறையில் இருந்த துப்பாக்கியை, துடைப்பதற்காக ஆர்யன் கையில் எடுத்தார். அப்போது திடீரென துப்பாக்கி வெடித்ததில், அதில் இருந்து சீறிய குண்டு அவரது நெஞ்சில் பாய்ந்தது. இதில் ஆர்யன் படுகாயம் அடைந்தார்.துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த அறைக்கு விரைந்து வந்த நண்பர்கள், ஆர்யன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அவரை, அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஆர்யன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து அமெரிக்க போலீசார் விசாரிக்கின்றனர். இதையடுத்து, சொந்த ஊரான தெலுங்கானாவுக்கு ஆர்யன் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.