பாலக்காடு இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்; மா.கம்யூ., ஆதரவில் சுயேட்சையாக சரின் போட்டி
பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், காங்கிரஸ் கட்சிக்கு மாநில அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு காங்., எம்.எல்.ஏ., ஷாபி பரம்ப்பில், லோக்சபா தேர்தலில் வடகரை தொகுதி எம்.பி.,யானார். இதையடுத்து வரும், நவ., 13ம் தேதி பாலக்காடு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.இடைத்தேர்தலில் போட்டியிட காங்., வேட்பாளராக ராகுல் மாங்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் தேர்வில் கட்சிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வில் அதிருப்தி தெரிவித்து காங்., கட்சியின் சமூக ஊடக பிரிவை சேர்ந்த கன்வினர் சரின் கட்சியிலிருந்து விலகி, மா.கம்யூ., கட்சியில் இணைந்து செயல்பட போவதாக நேற்று முன் தினம் அறிவித்தார். அதற்கு, மா.கம்யூ., கட்சியினர் வரவேற்பு தெரிவித்தனர்.இந்நிலையில், மா.கம்யூ., கட்சி ஆதரவில், சரின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் என, நேற்று காலை கூடிய மாவட்ட செயலக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மா.கம்யூ., மூத்த தலைவர் பாலன், அமைச்சர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.சரினுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது, காங்கிரஸ் ஓட்டு வங்கி பாதிக்கும். அதனால், தேர்தல் முடிவு சாதகமாக இருக்கும் என, கூட்டத்தில் முடிவெடுத்தனர்.இதையடுத்து நடந்த கட்சியின் மாவட்ட கமிட்டி கூட்டத்திலும், சரினை வேட்பாளராக நிறுத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மாலையில் நடந்த கூட்டத்தில், சரினை மா.கம்யூ., கூட்டணி சார்பில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என, மாநில செயலாளர் கோவிந்தன் அறிவித்தார்.முன்னதாக, நேற்று காலை மா.கம்யூ., கட்சியின் தலைவர்களை சந்திக்க, கட்சி அலுவலகத்திற்கு சென்ற சரினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அனல் பறக்குது!
இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மாநில அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. காங்., வேட்பாளர் தேர்வில் உட்கட்சி கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. காங்., அறிவித்த வேட்பாளரை மாற்ற வேண்டுமென போர்க்கொடி துாக்கிய சரின், கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவரையே சுயேட்சை வேட்பாளராக்கி, மா.கம்யூ., ஆதரவில் போட்டியிட வைத்து, தொகுதியை கைப்பற்ற, தேர்தல் வியூகம் வகுத்துள்ளனர். இதனால், பாலக்காடு தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது.