உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மற்றவர்களுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் தானம் பெறும் சுடுகு சாகித்ய பரிஷத்

மற்றவர்களுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் தானம் பெறும் சுடுகு சாகித்ய பரிஷத்

வீட்டில் புத்தகங்கள் உள்ளதா; படித்து விட்டீர்களா. அப்படியானால், அவற்றை துாசி படியவோ அல்லது துாக்கி எறிவதற்கு பதிலாக, சுடுகு சாகித்ய பரிஷத்துக்கு கொடுங்கள். நீங்கள் படித்து ரசித்த புத்தகங்களை மற்றவர்களும் படித்து பயன்பெறுவர்.இதுதொடர்பாக சுடுகு சாகித்ய பரிஷத் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி குல்கர்னி கூறியதாவது:சமீப காலமாக வாசிப்பு கலாசாரம் மறைந்து வருகிறது. அதேவேளையில், வீட்டில் நிறைய புத்தகங்கள் வைத்திருப்போருக்கு, அவற்றை நிர்வகிப்பது பெரிய சவாலாக இருக்கும்.

புத்தக தானம்

சிலருக்கு ரசனை இருந்தாலும், பணப்பிரச்னையால் புத்தகங்களை வாங்க முடிவதில்லை அத்தகையவர்களுக்கு பாலமாக இருக்க, 10 ஆண்டுகளுக்கு முன்பு புத்தக தானம் விழிப்புணர்வை துவக்கினோம்.கடந்த பத்து ஆண்டுகளில் நன்கொடையாளர்கள் இடமிருந்து மூன்று லட்சம் புத்தகம் வாங்கி, வினியோகித்துள்ளோம். பரிஷத் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் மலர்கள், பரிசுகள் வழங்குவதில்லை. வாங்கப்பட்ட புத்தகங்கள் மட்டுமே வழங்குகிறோம். கவிதை விழா நடத்தினால் மாணவர்களுக்கு பரிசாக புத்தகம் வழங்குவோம்.மங்களூரு மத்திய சிறைக்கு 300 புத்தகங்களும்; ஹாவேரி சிறைக்கு 258 புத்தகங்களும் கொடுத்து உள்ளோம். மாநிலத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு பள்ளிகளின் நுாலகத்துக்கு புத்தகங்கள் வழங்கி உள்ளோம். வாசிக்கும் முறை மக்களை காந்தம் போன்று இழுக்க வேண்டும்.மாநிலத்தின் 22 மாவட்டங்களில் எங்கள் பரிஷத் இயங்குகிறது. புத்தகங்கள் வழங்க விரும்புவோர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் டெலிவரி செய்தால், நாங்கள் சேகரித்து கொள்வோம். சிலர் தபால் மூலம் அனுப்புகின்றனர். அவற்றை பல்வேறு இடங்களுக்கு வழங்குவதற்கான செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்.பாட்டீல் புட்டப்பாவின் வற்புறுத்தலால், தார்வாடின் வித்யாவர்த்தக சங்கத்தில் இருந்து 500 புத்தகங்கள் கொடுத்தனர். பல மடங்கள், இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள் புத்தகங்கள் வழங்கி உள்ளனர்.

நுாலகம்

தற்போது எங்களிடம் 4,000 புத்தகங்கள் உள்ளன. புத்தகங்கள் தருவதாக பலர் கூறியுள்ளனர். ஆனால், புத்தகங்களை சேகரித்து வைக்க சரியான இடம் இல்லை. தற்போது சிறிய வீட்டில் புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மழையால் சில புத்தகங்கள் சேதமடைந்தன. யாராவது இடம் கொடுத்தால், ஒரு நுாலகத்தை திறக்கலாம்.புத்தகம் வழங்க விரும்புவோர் 94821 81305 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.நன்கொடையாளர்கள் வழங்கிய புத்தகத்தை, தன் வீட்டில் வைத்துள்ள கிருஷ்ணமூர்த்தி குல்கர்னி - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை