| ADDED : நவ 19, 2025 09:31 PM
புதுடில்லி: டில்லி செங்கோட்டையில் தற்கொலைப்படை தாக்குதலை நியாயப்படுத்தி சதிகாரன் டாக்டர் உமர் நபி பேசிய பழைய வீடியோவை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது. தலைநகர் டில்லியின் செங்கோட்டை பகுதியில், கடந்த 10ம் தேதி மாலை கார் திடீரென வெடித்து சிதறியதில், 15 பேர் உயிரிழந்தனர். இந்த காரை ஓட்டி வந்த ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபியும் உயிரிழந்தான் .இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன், உமர் நபி தற்கொலைப்படை தாக்குதலை நியாயப்படுத்தி பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் உமர் நபி ஆங்கிலத்தில், சதிச்செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளான். பயங்கரவாதிகளையும், பயங்கரவாத செயல்களையும் புகழந்து பேசியிருந்தான்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.இந்நிலையில் இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதால் அந்த வீடியோ நீக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.