நீதி துறையின் தலைவராக இருந்ததே பெருமை பிரிவு உபசார விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் உருக்கம்
புதுடில்லி: “இந்திய அரசியலமைப்பு, 75வது ஆண்டை கொண்டாடும் வேளையில், நீதித் துறையின் தலைவராக இருந்தது பெருமை அளிக்கிறது,” என, பிரிவு உபசார விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உருக்கமாக தெரிவித்தார். பணி ஓய்வு நாட்டின் 52வது தலைமை நீதிபதியாக, மே 14ல் பி.ஆர்.கவாய் பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் நாளை முடிவடைகிறது. அது விடுமுறை தினம் என்பதால் கடைசி வேலை நாளான நேற்று, கவாய் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. டில்லியில், உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய் பேசியதாவது: க டந்த 1985ல் சட்டத் துறை மாணவராக சேர்ந்தேன். பணிநிறைவின் போது நீதித் துறை மாணவராக விலகுகிறேன். மொத்தம், 41 ஆண்டுகள் நீதித் துறையில் பயணித்துள்ளேன். இந்தப் பயணத்தில், இந்திய அரசியலமைப்பு தன் 75வது ஆண்டை கொண்டாடும் வேளையில், தலைவராக இருந்து நீதித் துறையை வழி நடத்தியதை பெரு மையாக கருதுகிறேன். அரசியலமைப்பு எப்போதும் நிலையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது எப்போதும் பரிணாம வளர்ச்சி அடையும். எனவே, நீதிமன்றங்கள் சூழலுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஒரு வழக்கறிஞராகவும், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தபோது, இதை ஒரு அதிகாரப் பதவியாக பார்க்கவில்லை. உத்வேகம் மாறாக சமூகத்திற்கும், தேசத்திற்கும் சேவை செய்வதற்கான வாய்ப்பாக நம்பினேன். டாக்டர் அம்பேத்கர், எப்போதும் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக வாதிட்டார். அவரின் போதனைகளையும், இந்திய அரசியலமைப்பு முறையாக ஏற்றுக் கொள்வதற்கு முன், 1949 நவ., 25ல் அம்பேத்கர் ஆற்றிய கடைசி உரையில் இருந்து தான் நான் உத்வேகம் பெற்றேன். அடிப்படை உரிமைகளை, வழிகாட்டுதல் கொள்கைகளுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலைநாட்ட, முடிந்தவரை நான் முயற்சித்தேன். எளிமையான தீர்ப்புகளை எழுதுவதில் நம்பிக்கை கொண்டேன். அது கடைக்கோடி மக்களுக்காக எழுதப்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார். வாழ்த்து அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பி.ஆர். கவாய்க்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். கடந்த 2000ம் ஆண்டு மஹாராஷ்டிராவின் நாக்பூரில் அரசு வழக்கறிஞராக பணியை துவங்கிய கவாய், 2005ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியானார். பின், 2019ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும் என தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிடப்பட்ட வழக்கு உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் பி.ஆர்.கவாய் தீர்ப்பளித்துள்ளார். மேலும், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த அரசியல் சாசன அமர்வுக்கும் அவர் தலைமை தாங்கினார்.