| ADDED : ஜூன் 10, 2025 06:24 AM
கமல்ஹாசன் நடித்த,தக் லைப்திரைப்படத்தை திரையிடுவதற்கு பாதுகாப்பு கோரி, கர்நாடக திரையரங்கு சங்கம் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கமல்ஹாசன் நடித்த,தக் லைப்தமிழ் திரைப்படம் கடந்த 5ம் தேதி உலகம் முழுதும் வெளியானது. முன்னதாக, 'கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது' என, நடிகர் கமல்ஹாசன் பேசியது கர்நாடகாவில் சர்ச்சையானது. இதையடுத்து, கர்நாடகாவில் திரைப்படத்தை வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, அங்கு வெளியாகவில்லை.இந்நிலையில், திரைப்படத்தை திரையிடுவதற்கான அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு கோரி, கர்நாடக திரையரங்கு சங்கம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'திரைப்படத்தை திரையிடுவதற்கு வெளிப்படையான அச்சுறுத்தல்கள் உள்ளன. திரையரங்குகளுக்கு தீ வைக்கப்படும் என, மிரட்டல்கள் வருகின்றன' என்றனர்.இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், 'அப்படியெனில், திரையரங்குகளில் தீயணைப்பு கருவிகளை நிறுவுங்கள்' என்று கூறியதோடு, 'இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை முதலில் நாடுங்கள்' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். -டில்லி சிறப்பு நிருபர்-