உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளை மூட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்! காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காண அதிரடி நடவடிக்கை

டில்லி எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளை மூட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்! காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காண அதிரடி நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தலைநகர் டில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சூழலில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 'எல்லைப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை தற்காலிகமாக மூடவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது பற்றியோ பரிசீலிக்க வேண்டும்' என, டில்லி மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போது எழுந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காண நடைமுறைக்கு உகந்தபடி சிந்திக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது. டில்லியில் ஆண்டு தோறும் குளிர் காலங்களில் காற்றின் தரம் மோசமடைவது வழக்கமாகி வருகிறது. இதனால் சுவாச பிரச்னை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். குழந்தைகளின் உடல் நலனும் சீர்கெடுவதால், அவ்வப்போது பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பொதுமக்களும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், காற்று மாசு தொடர்பான பொது நல மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

காற்று மாசு பிரச்னை ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வாக மாறி விட்டது. எனவே, நடைமுறைக்கு சாத்தியமான அம்சங்களை வைத்தே இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

உடனடி பலன்

தலைநகர் டில்லியின் நுழைவுப் பகுதிகளில் அமைந்திருக்கும் ஒன்பது சுங்கச்சாவடிகளையும் தற்காலிகமாக மூடுவது அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், டில்லி மாநகராட்சியும் பரிசீலிக்க வேண்டும். சுங்கச்சாவடிகளை மூடினால், போக்குவரத்தில் தேக்கமோ, நெரிசலோ ஏற்படாது. இதனால், புகை மாசு பிரச்னையில் இருந்து பொதுமக்கள் தப்ப முடியும். சுற்றுச்சூழலும் சற்று மேம்படும். வெறும் நெறிமுறைகளை வகுத்து, அதை பின்பற்றாமல் இருப்பதை விட, நடைமுறைக்கு உகந்த சாத்தியக்கூறுகளை அமல்படுத்துவது சிறப்பானதாக இருக்கும். பிரச்னைக்கான தீர்வை நடைமுறைக்கு உகந்தபடி சிந்தித்தால் மட்டுமே உடனடி பலன் கிடைக்கும். காற்று மாசை தடுக்க ஏராளமான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த மூன்று மாதங்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை உள்ளது.

மாற்று பணி

இதனால், அத்தொழிலை நம்பி இருக்கும் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கான அரசின் நிதி, நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அந்த நிதி சம்பந்தம் இல்லாதவர்களுக்கு செல்லக் கூடாது. கட்டுமான தொழிலாளர்களுக்கு மாற்று பணி ஏற்பாடு செய்வது குறித் தும் அரசு பரிசீலிக்க வேண்டும். குளிர்காலம் துவங்கும்போதெல்லாம் காற்று மாசு பிரச்னை ஏற்படுகிறது. எனவே, காற்று தர மேலாண்மை கமிஷன் இதற்கான நிரந்தர தீர்வை கண்டறிய வேண்டும். நீண்டகால கொள்கைகளை வகுக்க வேண்டும். நகர்ப்புறப் போக்குவரத்து, போக்குவரத்து மேலாண்மை மற்றும் பயிர்க்கழிவுகளை எரிப்பதைத் தடுக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறிய அளவிலான அணுகுமுறைகள் தற்போது எழுந்திருக்கும் நெருக்கடிகளுக்கு நிச்சயம் தீர்வாக இருக்காது. காற்று மாசை தடுப்பது குறித்து டில்லி மாநகராட்சி மற்றும் டில்லி அரசு, காற்று தர மேலாண்மை ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். காற்று மாசை தடுக்க, காற்று தர மேலாண்மை ஆணையம் நீண்ட கால திட்டத்தை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை விசாரிக்கப்படும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, டில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு எதிராகக் கட்டாய நடவடிக்கை எடுப்பதைத் தடை செய்து, ஆக., 12ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீதிமன்றம் மாற்றி அமைத்தது. 'பிஎஸ் - 4' தரத்திற்குக் குறைவான மாசு உமிழ்வுத் தரங்களைக் கொண்ட வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு

டில்லியில் காற்று மாசு பிரச்னையால், கடந்த 16 நாட்களாக, கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், வாழ்வாதாரம் இழந்த பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, தலா, 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, டில்லி தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. மேலும், அடுத்த கட்ட நிவாரணங்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் அறிவிக்கப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களும், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என, டில்லியில் ஆளும் பா.ஜ., அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதை கண்காணிக்க சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், மருத்துவமனைகள், தீயணைப்புத் துறை, குடிநீர் மற்றும் மின்சார வாரியம், பொது போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

GMM
டிச 18, 2025 08:11

சுங்க சாவடி மூடும்போது கட்டணம் வசூலிக்க முடியாது. சாலை பராமரிப்பு இல்லை என்றால் 10 ஆண்டுகள் நிலைக்கும் சாலை ஒரே ஆண்டில் பாழ் படும். மருத்துவ கழிவுகள் அகற்றுவது போல் உள்ளாட்சி அமைப்புகள், மாநில நிர்வாகம் பயிர் கழிவுகள் அகற்ற மன்றம் உத்தரவிட முடியும். பழைய வாகனம் தடை சரியே. பாதுகாப்பு தேவையில்லாத யாரும் தனி கார் பயன் படுத்த தடை. பொது போக்குவரத்து அல்லது வேன். ஓராண்டு மாமிச உணவு, மது, புகை தடை. காலியிடம் கைபற்றி, மரம் நட வேண்டும். அதிக பசு மாடுகள் வளர்க்க வேண்டும். அதிக புகை வெளியிடும் நிறுவனம் மூடல் அல்லது இட மாற்றம். சிறிய தங்கும் விடுதிகள் மூடல். கட்டுமான தொழிலாளர்கள் இழப்பீடு தவறு. நாடு முழுவதும் பயணம் செய்ய கட்டண சலுகை வழங்கலாம்.


சிட்டுக்குருவி
டிச 18, 2025 06:22

உடனே டெல்லி உள்ள எல்லா பெட்ரோல் ,டீசல் வண்டிகளையெல்லாம் எக்ட்ரிக் /RNG க்கு மாற்ற அரசு அதிகபட்சமானியமும் மீதிக்கு வங்கி கடனையும் ஏற்பாடு செய்து மாற்றவேண்டும் . இது உடனடியாக செய்யக்கூடியது .இரண்டாவது சாலையோரங்களில் எல்லாம் மண்தரையில்லாமல் சிமெண்ட் சாலைபோடவேண்டும் .சாலையோரங்களில் எல்லாம் 10 அடிக்கு ஒருமரம் நட்டு வளர்க்கவவேண்டும் . சாலைகளை மூன்று அல்லது ஆறு மதங்களுக்கொருமுறை மெக்கானிக்கல் ஸ்வீப்பர் டிரக் மூலம் சுத்தம் செய்யவேண்டும் .குப்பைகளை எங்கும் வீசக்கூடாது வீசுவதற்கு அதிகபட்ச அபராதம் விதிக்கவேண்டும் ,


raja
டிச 18, 2025 06:07

கேட்டது எல்லாத்தையும் கொடுத்து உங்க குடும்பம் கொள்ளை அடிக்கவா...


ஜெய்ஹிந்த்புரம்
டிச 18, 2025 03:30

டில்லி முதல்வர் ரேகா குப்தா, தந்தூரி சிக்கன் சமைப்பதால் தான் காற்று மாசு பிரச்சினை என்று கண்டுபிடித்துள்ளார். தெர்மாமீட்டரில் காற்று மாசின் அளவை அறியலாம் என்று இதற்கு முன் கண்டுபிடித்துள்ளார்.


vaiko
டிச 18, 2025 01:43

ஸ்வாமிநாதன் பேச்சை கேட்டு திருப்பரங்குன்றத்தில் தீப்பந்தம் கொளுத்தினால் காற்று மாசு ஆகாதா? டெல்லிக்கு ஒரு சட்டம், மதுரைக்கு ஒரு சட்டமா


ஜெய்ஹிந்த்புரம்
டிச 18, 2025 03:22

சூப்பரப்பு.


தாமரை மலர்கிறது
டிச 18, 2025 01:42

டெல்லியில் அளவுக்கு அதிகமான காற்றுமாசு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைவர்களுக்கே ஆபத்து. தலைநகரில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி, அதன் மூலம் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட, சென்னை, பெங்களுர், மங்களூர், கொச்சின், ஹைதராபாத், கோயம்பத்தூர், விஸாக்கப்பட்டினம் போன்ற பணவரவு உள்ள மற்ற செல்வாந்த நகர்களில் சுங்கச்சாவடிகளை அதிகரிப்பது நல்லது. ஏனனில் பொருளாதார முன்னேற்றத்தை காற்று மாசுக்காக காவு கொடுக்க முடியாது.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 18, 2025 03:34

காற்று மாசு காரணமாக தான் பிரதமர் வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகிறார்.


புதிய வீடியோ