| ADDED : நவ 08, 2025 02:26 AM
புதுடில்லி: 'வாகன விபத்து இழப்பீடு மனுக்களை கால வரம்பு காரணத்தை கூறி தள்ளுபடி செய்யக்கூடாது' என, உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 'மோட்டார் வாகன சட்ட பிரிவில் விபத்து நடந்து ஆறு மாதத்திற்குள் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, விதி உள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியுள்ளதாவது: மோட்டார் வாகன சட்டத்தில், 2019ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி வாகன விபத்து நடந்து ஆறு மாதத்திற்குள் இழப்பீடு கோருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது அரசியலமைப்பு சட்டப்படி பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதை தடுக்கிறது. சட்ட ஆணையத்தின் ஆலோசனை, பார்லிமென்ட் விவாதம் ஏதுமின்றி இது நிறைவேற்றப்பட்டது. ஏழைகள், கிராமப்புற மக்கள் சட்ட உதவியை நாட தாமதம் ஏற்படலாம். எனவே இந்த கால வரம்பு விதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் அரவிந்த் குமார், அஞ்சாரியா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: இந்த சட்டப்பிரிவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் வழக்கு தொடரப்பட்டிருப்பதை அறிகிறோம். இந்த வழக்கிற்கு வழங்கும் தீர்ப்பு அவற்றுக்கும் பொருந்தும். இந்த மனுக்களின் விசாரணை முடியும் வரை தீர்ப்பாயம் அல்லது உயர் நீதிமன்றம் காலவரம்பை காரணம் கூறி இழப்பீடு கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய கூடாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.