புதுடில்லி : உதய்பூர் பைல்ஸ்: கன்னையா லால் டெய்லர் மர்டர் என்ற திரைப்படத்துக்கு தடைவிதிக்க கோரிய மனுவை, அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், 'படம் வெளியாகட்டும்' என கூறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரைச் சேர்ந்த தையல்காரரான கன்னையா லால், 2022, ஜூன் மாதம், அவரது கடையில் முகமது ரியாஸ் மற்றும் முகமது கவுஸ் ஆகியோரால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.முன்னாள் பா.ஜ., பிரமுகர் நுாபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து கூறிய சர்ச்சை கருத்துக்களுக்கு ஆதரவாக கன்னையா லால் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டார். அதற்காக அவரை கொலை செய்ததாக கொலையாளிகள் வீடியோ வெளியிட்டனர்.நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது. ஜெய்ப்பூரில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.இந்த சம்பவத்தை தழுவி, பாலிவுட்டில் உதய்பூர் பைல்ஸ்: கன்னையா லால் டெய்லர் மர்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நாளை இப்படம் வெளியாக உள்ளது. தணிக்கை வாரியம் இப்படத்தில் 150 காட்சிகளை நீக்க பரிந்துரைத்தது. அதன்படி சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்கக் கோரி, கன்னையா லால் கொலை வழக்கில் எட்டாவது குற்றவாளியாக உள்ள முகமது ஜாவேத் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை குற்றவாளியாக படத்தில் காட்டுவது விசாரணையை பாதிக்கும். மேலும் இரு பிரிவினரிடையே மோதலை துாண்டும் வகையில் காட்சிகள், வசனங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன' என கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் சுதான்ஷு துலியா மற்றும் ஜோய்மால்யா பக்சி, இதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனர்.படம் வெளியாகட்டும்; நீதிமன்ற விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு துவங்கியதும், அங்கு மனு தாக்கல் செய்யுங்கள் என கூறினர்.
தடை கேட்டவர்களுக்கு
சிறப்பு திரையிடல்உதய்பூர் பைல்ஸ் படத்துக்கு தடை கோரி ஜாமியா உலாமா ஹிந்த் மற்றும் தாருல் உலுாம் தியோபந்த் அமைப்பின் சார்பில் முன்னதாக உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். படத்திற்கு தணிக்கை வாரியம் சான்று அளித்தது விதிமீறல் என கூறியிருந்தனர். விதிப்படியே செயல்பட்டதாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பில் கூறப்பட்டது. மேலும், பரிந்துரைத்த நீக்கங்களை படக்குழுவினர் செய்துள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து தடை கோரிய பிரிவினருக்கு சிறப்பு திரையிடலுக்கு ஏற்பாடு செய்ய, பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.