உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 'தற்போது எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தமிழக போலீசார் வழக்கு பதிந்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு கைது செய்தனர். பல மாதங்களாக சிறையில் இருந்த அவருக்கு கடந்த செப்டம்பர் 26ல் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து அவர் மின்சார துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், வெளியே வந்த உடனே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது, விசாரணையை பாதிக்கும் என கூறியிருந்தார்.இது தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அபய்.எஸ்.ஒகா மற்றும் பங்கஜ் மிட்டல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் ராம்சங்கர், ''எங்கள் தரப்பில் விளக்கத்தை பெற்று வந்துள்ளோம். அது குறித்து வாதாட அனுமதிக்க வேண்டும்,'' என தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதிகள், 'அமைச்சர் ஆனது குறித்து உரிய விளக்கம் வேண்டும் என்றுதான் கூறினோம். வாதம் செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது' என்றனர். அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'இந்த வழக்கில் அமலாக்கத்துறையையும் மனுதாரராக சேர்க்க அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கில் அமலாக்கத்துறையை இணைக்க அனுமதித்தனர். மேலும், இந்த வழக்கில் தற்போது ஜாமினை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ