உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தகுதி நீக்க நடவடிக்கையில் பார்லிமென்டை... குறைத்து மதிப்பிடாதீர்கள் !: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

தகுதி நீக்க நடவடிக்கையில் பார்லிமென்டை... குறைத்து மதிப்பிடாதீர்கள் !: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

'பண மூட்டை சிக்கிய, 'வீடியோ' காட்சிகள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில், உங்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை பார்லிமென்ட் எடுத்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த அளவுக்கு பார்லிமென்டை குறைத்து மதிப்பிடாதீர்கள்' என, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு கண்டிப்புடன் தெரிவித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்த போது, அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரிக்க, பல்வேறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய உள்விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழுவும் விசாரணை நடத்தி தலைமை நீதிபதியிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ''உள்விசாரணை குழுவின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட, 'வீடியோ' காட்சிகள் வெளியானது. ''இதன் மூலமாக நீதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது,'' என, வாதிட்டார். இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: 'வீடியோ' வெளியே வந்திருக்கக் கூடாது தான். அதனால் தற்போது என்ன ஆகிவிட்டது? இந்த விவகாரத்தில் உங்களுக்கு எதிராக பார்லிமென்ட் தன் அதிகாரத்திற்கு உட்பட்டு தகுதி நீக்க நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் இப்படித்தான் செயல்பட வேண்டும் என தலைமை நீதிபதியும், உச்ச நீதிமன்றமும் சொல்ல முடியாது. அதுமட்டுமில்லாமல், இந்த வீடியோ காட்சிகளின் தாக்கத்தினால் தான் தகுதி நீக்க நடவடிக்கையை பார்லிமென்ட் முன்னெடுத்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த அளவிற்கு பார்லி மென்டின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். உள்விசாரணை குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வளவு தாமதமாக நீதிமன்றத்தை நீங்கள் நாடுவது ஏன்? கைப்பற்றப்பட்டது உங்கள் பணமா, இல்லையா என்பதை நாங்கள் ஏன் உட்கார்ந்து முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு கண்டிப்புடன் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.- டில்லி சிறப்பு நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை