உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வில் வசிப்பிட ஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம் என்கிறது உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வில் வசிப்பிட ஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம் என்கிறது உச்ச நீதிமன்றம்

புதுடில்லி : முதுநிலை மருத்துவப் படிப்புகளில், வசிப்பிடத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு, 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு, சில மாநிலங்களில் வழங்கப்படுகிறது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிட்டது.இதை எதிர்த்து, 2019ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்தது.

படிக்கும் உரிமை

அதன்படி விசாரித்த நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சுதான்ஷு துலியா, எஸ்.வி.என்.பட்டி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் தங்கியிருக்க நமக்கு உரிமை உள்ளது. அதுபோல, நாட்டின் எந்த ஒரு பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் உரிமையையும் அரசியலமைப்பு சட்டம் வழங்குகிறது.அரசியலமைப்பு சட்டத்தின்படி, இந்தியா என்பது ஒரே நிலப்பகுதி. அதில் மாகாணங்கள், மாநிலங்கள் என்று எந்த பேதமும் கிடையாது. நாம் அனைவரும் இந்திய குடிமக்கள். அதனால், நாட்டின் எந்த பகுதியிலும் தங்கியிருக்கலாம்; படிப்பது அல்லது தொழில் செய்வது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.இளநிலை படிப்புகளில் வேண்டுமானால், வசிப்பிடத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம். ஆனால், மருத்துவ நிபுணத்துவம் உள்ள முதுநிலை படிப்புகளில், வசிப்பிடத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

செல்லுபடியாகும்

ஏற்கனவே, இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சலுகைகளை பெற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; அது செல்லுபடியாகும். ஆனால், இனி, வசிப்பிடத்தின் அடிப்படையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை