முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு பள்ளிக் குழந்தையை போல நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றம் விமர்சித்து உள்ளது.முல்லைப்பெரியாறு அணை தொடர்பான மூல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தவிர அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும், அணை தொடர்பான வழக்குகளில் மத்திய அரசையும் எதிர்மனுதாரராக இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவையும் நிலுவையில் உள்ளன.முல்லைப் பெரியாறு ஆணையை பராமரிக்க செல்லும் தமிழக அதிகாரிகளுக்கு கேரள அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும், அணையின் பராமரிப்புக்கு தேவையான சில மரங்களை வெட்டுவதற்கு தடையாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. விசாரணை
இந்த மனு, நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக விமர்சித்தனர். 'தமிழக அரசு, 'மெட்டல்' படகை பயன்படுத்துவோம் என்றால், கூடாது என்கிறீர்கள். 'மரங்கள் வெட்டப்படும் விவகாரங்களில் கூட உங்களது செயல்பாடுகள் பள்ளி குழந்தைகள் போல இருக்கிறது. பள்ளி குழந்தைகள் கூட பிரச்னைகளை அவர்களாகவே சரி செய்து கொள்வர். ஆனால் நீங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்க்கிறீர்கள்' என தெரிவித்தனர்.தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதம்:கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதுதான் கேரள அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்காக எவ்வளவு தொல்லைகள் கொடுக்க முடியுமோ கொடுக்கின்றனர். இவ்வாறு வாதிடப்பட்டது.இதற்கு பதில் அளித்த கேரள அரசு தரப்பு, 'வழக்கு, 25 ஆண்டுகளாக நடக்கிறது என்றால் அணையும், 25 ஆண்டுகள் பழமை ஆகிவிட்டது என்று அர்த்தம். அதனால் தான் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் எனக் கோருகிறோம்' என்றனர். இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரின் அளவு உள்ளிட்டவை ஏற்கனவே முடிந்து போன விஷயம் அதில் இனிமேல் எதையும் விசாரிக்க முடியாது. அறிக்கை
மேலும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு கண்காணிப்பு குழுவை அமைத்துஉள்ளது. இந்த கண்காணிப்பு குழு தலைவர் அடுத்த ஒரு வாரத்தில் கேரளா மற்றும் தமிழக அரசு அதிகாரிகளை வைத்து பேச்சு நடத்த வேண்டும். பின், அதை விரிவான அறிக்கையாக நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -