உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புது படத்திற்கு ஸ்கிரிப்ட் தயாரிப்பு பா.ஜ., முனிரத்னாவை சாடிய சுரேஷ்

புது படத்திற்கு ஸ்கிரிப்ட் தயாரிப்பு பா.ஜ., முனிரத்னாவை சாடிய சுரேஷ்

பெங்களூரு : ''பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீது முட்டை வீசப்பட்ட வழக்கில், எங்கள் பங்கு எதுவும் இல்லை. தயாரிப்பாளரான அவர் புது படத்திற்கு ஸ்கிரிப்ட் தயாரிக்கிறார்,'' என்று, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் கூறினார்.

ஆசிட் முட்டை

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீது, கடந்த 25ம் தேதி முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. என் மீது வீசப்பட்டது ஆசிட் முட்டை. என்னை கொலை செய்ய சதி நடக்கிறது. இதற்கு துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ், காங்கிரஸ் தலைவர் ஹனுமந்தராயப்பா, அவரது மகள் குஸ்மா தான் காரணம் என்று, முனிரத்னா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.இதுகுறித்து பெங்களூரில் நேற்று சுரேஷ் அளித்த பேட்டி:சிவகுமார், என் மீது குற்றச்சாட்டுகளை சொல்லாமல், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களால் இருக்கவே முடியாது. முனிரத்னா சினிமா தயாரிப்பாளர். முட்டை வீசப்பட்டதை வைத்து, புது படத்திற்கு அவர் 'ஸ்கிரிப்ட்' தயாரிக்கிறார். அவரது கதைகளை ஊடகத்தினரும் நம்புகின்றனர். கன்னட திரையுலகில் சமீபகாலமாக நல்ல சினிமா வரவில்லை. அந்த குறையை போக்கும் முயற்சியில், முனிரத்னா ஈடுபட்டு உள்ளார்.

சி.பி.ஐ., விசாரணை

முட்டை வீசியதால், முனிரத்னாவின் தலைமுடி எரிந்து உள்ளது என்று, டாக்டர் கூறினார். ஆனால் மறுநாளே எரிந்ததாக கூறப்படும் இடத்தில் முடி உள்ளது. அது எப்படி. முட்டை வீசிய வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கட்டும். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மல்லத்தள்ளியில் வசிக்கும் ரஞ்சித் என்ற வாலிபரின் கை, கால்களை முனிரத்னாவும், அவரது ஆதரவாளர்களும் முறித்து உள்ளனர். சட்டசபை தேர்தலின் போது, ஆர்.ஆர்.நகரில் போலி வாக்காளர் அட்டை வினியோகிக்கப்பட்டது பற்றியும் சி.பி.ஐ., விசாரிக்கட்டும்.முனிரத்னா தியாகி என்று, அவருக்கு ஆறுதல் கூற ரவி செல்கிறார். ஒக்கலிக சமூக பெண்களை பற்றி கேவலமாக பேசிய, முனிரத்னாவுக்கு ஆறுதல் சொல்ல ரவிக்கு எப்படி மனது வருகிறது. முனிரத்னா பேசிய ஆடியோவை, மீண்டும் ஒரு முறை ரவிக்கு போட்டு காட்ட வேண்டும்.

8 கோடி ரூபாய் மோசடி

முனிரத்னா அமைச்சராக இருந்த போது, அவர் மீது பலாத்கார புகார் அளித்த பெண்ணை, விகாஸ் சவுதாவில் உள்ள அறையில் வைத்து, பலாத்காரம் செய்து உள்ளார். இது பா.ஜ., தலைவர்களுக்கு குற்றமாக தெரியவில்லையா. எனது பெயரை பயன்படுத்தி, நகைக்கடையில் நகை வாங்கி 8 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது பற்றி, எனது கவனத்திற்கும் வந்து உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி, போலீஸ் கமிஷனர் தயானந்தாவிடம் ஓரிரு நாளில் புகார் செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை