உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2011 முதல் தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் கொர்ர்ர்!: உண்மையை போட்டு உடைத்தது மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு

2011 முதல் தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் கொர்ர்ர்!: உண்மையை போட்டு உடைத்தது மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு

புதுடில்லி:தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குடித்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த, 2011 முதல் அந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நடவடிக்கைகளில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தாதது, சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆய்வு வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1 - 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற அந்த குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=he4mcj0q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ரசாயனம்

இதையடுத்து, குழந்தைகளின் சிறுநீரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், குழந்தைகள் குடித்த, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தில், நச்சுத் தன்மை ஏற்படுத்தும், 'டை எத்திலின் கிளைகால்' என்ற ரசாயனம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதையடுத்து, தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், 'ஸ்ரீசன்' நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்பது தற்போது அம்பலமாகிஉள்ளது. இது குறித்து, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும், 'ஸ்ரீசன்' மருந்து நிறுவனத்துக்கு, டி.என்.எப்.டி.ஏ., எனப்படும், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், 2011ல் உரிமம் வழங்கியது.இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்ததை அடுத்து, அந்த நிறுவனத்தில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, கடந்த 3ம் தேதி ஆய்வு மேற்கொண்டது. இதில், மோசமான உட்கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை மீறியும், இந்த நிறுவனம் செயல்பட்டது தெரிய வந்தது. தணிக்கை இல்லை இருப்பினும், 15 ஆண்டுகளாக செயல்படும் இந்த நிறுவனத்தின் மீது, தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் எந்த தணிக்கைக்கும் இந்த நிறுவனம் உட்படுத்தப்படவில்லை.எங்கள் தரவு தளங்களிலும் இந்த நிறுவனம் தொடர்பாக எந்த விபரமும் இல்லை. மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகள், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின், 'சுகம்' இணையதளத்தின் வாயிலாக புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம், தங்கள் தயாரிப்புகளை புதுப்பிக்கவில்லை. மருந்து உற்பத்தியாளர்கள் தொடர்பான பொது தரவுதளம் உருவாக்கும் நோக்கில், அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகங்களுக்கும், கடந்த 2023ல் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடிதம் அனுப்பியிருந்தது. அடுத்தடுத்து நடந்த மாதாந்திர ஆய்வு கூட்டங்களிலும், இந்த கருத்து வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், இந்த தளத்தில். 'ஸ்ரீசன்' நிறுவனம் இணைக்கப்படவில்லை. மாநில அரசும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்ததை அடுத்து, மத்திய பிரதேச அரசின் அறிவுறுத்தலின் பேரிலேயே, தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அதிகாரிகள், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஆலையில் ஆய்வு நடத்தினர். ஆனால், இது குறித்து, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு எந்த தகவலையும் அவர்கள் வழங்கவில்லை. அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு குறித்தும் தெரியப்படுத்தவில்லை. கடந்த 3ம் தேதி, ஆய்வு முடிவுகள் குறித்து தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தன்னிச்சையாக அறிவித்ததை அடுத்தே, அது குறித்து மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு தெரிய வந்தது. இதையடுத்தே, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தில், 'டை எத்திலின் கிளைகால்' அனுமதிக்கப்பட்ட 0.1 சதவீதத்தை விட, 48 சதவீதம் அதிகம் இருந்தது எங்கள் கவனத்துக்கு வந்தது. இந்த விவகாரத்தில், தமிழக அதிகாரிகளின் தகவல் இருட்டடிப்பால், உண்மையான தகவல்களை எங்களால் வழங்க முடியாமல் போனது. மருந்து நிறுவனத்தில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது, மாநில மருந்து ஆய்வாளர் ஒருவரை அனுப்ப கோரப்பட்டது. இருப்பினும், அவர் எங்கள் குழுவுடன் ஆய்வில் பங்கேற்கவில்லை. கடந்த 4ல், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடிதம் அனுப்பியது. இதில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை தொடர்ந்து, கடந்த 8ம் தேதி தமிழகம் வந்த மத்திய பிரதேச போலீசார், இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை கைது செய்தனர். உலக சுகாதார நிறுவனத்தின், ஜி.எம்.பி., எனப்படும் நல்ல உற்பத்தி பொருட்களுக்கான சான்றிதழை, 'ஸ்ரீசன் பார்மா' பெறவில்லை. அதேபோல், மருந்து மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தில் உள்ள தரமான பொருட்களுக்கான 'எம்' அட்டவணையில், 2023ல் திருத்தப்பட்ட விதிகளையும் இந்த நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். '14 ஆண்டுகளாக சோதனை செய்யவில்லை' ''மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறப்புக்கு காரணமான மருந்து தயாரித்த, ஸ்ரீசன் நிறுவனத்தில், 14 ஆண்டுகளாக எவ்வித பரிசோதனையையும், மருந்து கட்டுப்பாட்டு துறை செய்யவில்லை' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: 'மருத்துவ கட்டமைப்பில் வட மாநிலங்களை விட முன்னேறி, முதலிடத்தில் இருக்கிறோம்' என்று தற்பெருமை பேசும் தி.மு.க., ஆட்சியில், காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து, குழந்தைகளின் உயிரை பறித்து, உலகளவில் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தயாரித்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில், தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம், 14 ஆண்டுகளாக எந்த சோதனையும் நடத்தவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., அரசுகளின் அலட்சியத்தால், 364 விதிமீறல்களை அந்நிறுவனம் செய்துள்ளது. இந்த மோசடி நிறுவனம் செயல்பட, திராவிட ஆட்சிகளில் நிலவும் ஊழல் முறைகேடே முக்கிய காரணம். மருந்தகங்களில் மாதம், 1,000 ரூபாய், மருத்துவமனைகளில், 2,000 ரூபாய், மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெறுகின்றனர். மருத்துவ நிறுவனங்களில் ஆய்வு செய்யாமல், இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க, தி.மு.க., அரசு காத்திருக்கிறது. 'சுகாதாரத் துறையில் எந்த குறையும் இல்லை' எனக் கூறும் அமைச்சர் சுப்பிரமணியன், இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்? 'தமிழகத்தை தலைகுனிய வைக்க மாட்டோம்' எனக் கூறும் முதல்வர், உலகளவில் ஏற்பட்டுள்ள தலைகுனிவிற்கு என்ன பதில் கூற போகிறார்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

SRIRAMA ANU
அக் 12, 2025 12:29

மத்திய அரசு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் 11 ஆண்டுகளாக என்ன செய்து? இப்பொழுது குற்றத்தை சொல்லும் நீங்கள் அப்பொழுது ஏன் அந்த குற்றத்தை களைய நடவடிக்கை எடுக்கவில்லை?


ஆரூர் ரங்
அக் 12, 2025 14:51

சுகாதாரத் துறை மாநிலப்பட்டியலில் உள்ள விஷயம். ஆலை அமைக்க அனுமதி முதல் அடிக்கடி தரக்கட்டுப்பாட்டு ஆய்வு வரை மாநில அரசின் முழுப்பொறுப்பு. மாநில துறைக்கு அ‌வ்வ‌ப்போது ஆலோசனை அளிப்பதும் புதுக் கண்டுபிடிப்பு மருந்துகளுக்கு லைசென்ஸ் அளிப்பது, மருந்து ஆராய்ச்சி மட்டுமே மத்திய அரசால் செய்யக்கூடியது. மற்றபடி நாட்டிலுள்ள 5000 க்கும் மேற்பட்ட ஆலைகளை டெல்லியிலிருந்து கட்டுப்படுத்த முடியாது. மேற்பார்வை ஆய்வு மட்டுமே சாத்தியம். மாநில அரசின் பொறுப்பே அதிகம். ஒவ்வொரு முறையும் பயன்படுத்தபடும் உபமூலப்பொருள் தரம் பற்றி டெல்லியிலிருந்து கண்காணிக்க இயலாது. 2009 இல் UPA திமுக ஆட்சியிலிருந்து இந்த கம்பெனி தவறுகள் இழக்கத் துவங்கிவிட்டதாம். புகார்கள் எதும் வராததால் தப்பித்து வந்தது. ஆக தமிழக தயாரிப்புப் பொருட்கள் என்றாலே வாங்க அஞ்சும் நிலைக்கு விடியலின் திறமையே காரணம்.


ஆரூர் ரங்
அக் 12, 2025 11:17

சார் பொறுப்பு வகிக்கும் இலாகா. அவர் வழியில் பிசியா இருப்பாங்க. தலைநகருக்கு அருகேயே கண்காணிப்புக்கு நேரமில்லை.


vbs manian
அக் 12, 2025 11:07

கரூர் விஷயத்தில் யார் யாரையோ குற்றம் சாட்டுகிறார்கள். இந்த மருந்தை சாப்பிட்டு 25 குழந்தைகள் மரணம் என்று செய்தி. தார்மிக பொறுப்பு யாருக்கும் இல்லையா. இன்ஸ்பெக்டர்களை சஸ்பெண்ட் செய்து பிரச்சினையை முடித்து விட்டார்கள்.


kumar
அக் 12, 2025 09:26

கவர்மெண்ட் வேலை கிடைத்தால் போதும் எந்த வேலையும் பார்க்கத் தேவையில்லை யார் இருந்தாலும் கவலை இல்லை லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்கள் ஜாலியாக இருக்கலாம். இப்படித்தான் அரசு அதிகாரிகள் இப்பொழுது இருக்கிறார்கள். அரசின் அனைத்து நபர்களும் லஞ்சம் வாங்குவதால் லஞ்சத்தை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை தடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 12, 2025 09:20

“2011 முதல்”


விஸ்வநாத் கும்பகோணம்
அக் 12, 2025 08:40

சீமான் அவர்கள் சொன்னது போல் மருந்து கட்டுப்பாட்டு துறையில் நிலவும் அநியாய ஊழலே மக்களின் உயிரைப் பறிப்பதற்கு காரணம். மருந்து ஆய்வாளர்கள் ( Drug Inspector) எந்த மருந்து கடைக்கும் சென்று ஆய்வு நடத்துவது இல்லை. மாதந்தோறும் ஒரு கடைக்கு ஐநூறு ரூபாய் வீதம் அவர் கட்டுப்பாட்டில் ( jurisdiction) உள்ள அத்தனை கடைகளில் இருந்தும் மாமூல் கவர் போய்விடும். இதைத் தவிர தீபாவளி பொங்கல் விசேஷ payment தனி. ஆய்வாளர்கள் AD எனப்படும் மாவட்ட அதிகாரி மற்றும் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இவர்களுடன் லஞ்சப் பணத்தை பகிர்ந்து கொள்வார்கள். அவர் ஆட்சியாளர்களுடன் பகிர்ந்து கொள்வார். இந்த திராவிட மாடல் காலம் காலமாக நடந்து வருகிறது. இந்த ஊழல் மற்ற துறைகளில் நடப்பதை பின்னுக்கு தள்ளி விடும். பிரதமரை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு மக்களின் உயிரைப் பறிக்கும் இந்த திராவிட மாடலை அகற்ற வேண்டும். சாராயம் ஓட்டுக்கு பணம் இவற்றிலிருந்து மக்கள் வெளியே வரவேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
அக் 12, 2025 08:34

2011 - 2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது ..... 2021 முதல் இன்றுவரை திமுக ஆட்சிதான் நடக்கிறது .... ஆக இரு கழகங்களும் பொறுப்பு .... திராவிட கசுமாலங்களை ஒதுக்காதவரை தமிழனுக்கு விடிவில்லை ....


VENKATASUBRAMANIAN
அக் 12, 2025 08:34

பெட்டி போயிருக்கும். சம்பந்தபட்ட எல்லோரையும் டிஸ்மிஸ் செய்யுங்கள். துறை அமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும்


Gokul Krishnan
அக் 12, 2025 08:11

இதை கண்டு பிடிப்பதற்கு 15 ஆண்டுகள் எடுத்து கொண்ட மத்திய மருந்து வாரியமும் கொர்ர் தானே


Venugopal S
அக் 12, 2025 07:40

இப்போது வந்து வாய் கிழியப் பேசும் மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு 2014 முதல் தூங்காமல் விழித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததா? தமிழகத்தில் நடக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் மத்திய அரசு காரணம், எல்லா தவறுகளுக்கும் மாநில அரசு மட்டுமே காரணம் என்ற மனப்பான்மை தவறு!


புதிய வீடியோ