உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனிம வளங்களுக்கு வரி: மாநிலங்களுக்கு வெற்றி!

கனிம வளங்களுக்கு வரி: மாநிலங்களுக்கு வெற்றி!

புதுடில்லி: சுரங்கங்கள், கனிம வளமுள்ள நிலங்கள் மற்றும் கனிமங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு; மத்திய அரசு அதை தடுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. எம்.எம்.டி.ஆர்.ஏ., எனப்படும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் - 1957ன்படி, சுரங்கங்கள் மற்றும் கனிம வளமுள்ள நிலங்களை மத்திய அல்லது மாநில அரசின் துறையிடம் இருந்து குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்கள், 'ராயல்டி' எனப்படும் காப்புத் தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு குத்தகை பெற்றிருந்த 'இண்டியா சிமென்ட்ஸ்' நிறுவனம் செலுத்தி வந்த ராயல்டி மீது, 'செஸ்' எனப்படும் கூடுதல் வரியை தமிழக அரசு விதித்தது.

ஏழு நீதிபதிகள்

அதை எதிர்த்து நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இறுதியாக அவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது. ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு 1989ல் விசாரித்தது. 'ராயல்டி என்பதும் வரி தான்; எனவே, அதன் மீது கூடுதலாகவோ அல்லது தனியாகவோ வரி விதிக்க முடியாது' என்று தீர்ப்பளித்தது. மேலும், மேற்சொன்ன சட்டத்தின்படி, கனிம வளங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தரப்பட்டுள்ளதால், வரி விதிக்கும் அதிகாரம் பார்லிமென் டுக்கும், மத்திய அரசுக்கும் தான் உண்டே தவிர, மாநில அரசுக்கோ, சட்டசபைக்கோ கிடையாது' என்றும் கூறியது. இதன்பின் மேற்கு வங்க அரசு மற்றும் 'கேசோராம் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் இடையே, இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டது. அந்த வழக்கு, 2004ல் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. முந்தைய தீர்ப்பில் அச்சுப் பிழை உள்ளதாக அமர்வு தெரிவித்தது.

வரி அல்ல

அதாவது, 'ராயல்டி மீதான கூடுதல் வரி, ஒரு வரியே' என்பதற்கு பதிலாக, 'ராயல்டி என்பது ஒரு வரியே' என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக கூறியது. அதனால், ராயல்டி ஒரு வரியல்ல என்பது உறுதியாகிறது என்றும் அமர்வு தன் உத்தரவில் கூறியது.இதற்கிடையே, இதே போன்ற பிரச்னையில் 80க்கு மேற்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் குவிந்தன. கடந்த முறை ஏழு நீதிபதிகள் அமர்வு விசாரித்ததால், இம்முறை ஒன்பது நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்த தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.

மாறுபட்ட தீர்ப்பு

அவர் தலைமையில், ஒன்பது நீதிபதிகள் பிப்ரவரியில் விசாரணை துவங்கினர். எட்டு நாள் விசாரணை நடந்தது. வரி விதிக்க உரிமை உள்ளது என்று மாநில அரசுகள் வாதிட்டன. அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வாதிட்டது. குத்தகை எடுத்தவர்களும் மத்திய அரசின் நிலையில் வாதிட்டனர். இறுதியாக நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 'ராயல்டி என்பது வரி அல்ல. தனியாக வரி விதிக்க சட்டசபைகளுக்கு உரிமை உள்ளது' என்று எட்டு நீதிபதிகள் கூறினர். நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வாசித்தார். கனிம வளங்களை பாதுகாக்கவும், பயன்படுத்தவும் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில அரசுகளுக்கும் அந்த அதிகாரத்தை பங்கிட்டால், மேற்படி சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போகும் என்பது அவர் தீர்ப்பின் சாரம்.

யாருக்கு லாபம்?

கனிம வளம் மிகுந்த ஏழு மாநிலங்களான ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிராவுக்கு இத்தீர்ப்பு பெரிதும் பலன் தரலாம். தமிழகம் இந்த பட்டியலில் ரொம்பவும் கீழே இருக்கிறது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வாயிலாக மத்திய அரசு இதுவரை, பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளதால், அதை எங்களுக்கு திருப்பித்தர உத்தரவிடுங்கள் என பல மாநிலங்கள் கோர்ட்டில் முறையிட்டன. மத்திய அரசு அதை பலமாக எதிர்த்தது. மாநிலம் வாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்தால், 31ம் தேதி விசாரிப்பதாக அமர்வு தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mani . V
ஜூலை 26, 2024 21:01

மாநிலங்கள் கனிம வளங்களுக்கு வரி விதிக்கலாம். பின்னர் அதை ஊழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஆட்டையைப் போட்டு, வீட்டுக்கு எடுத்து போகலாம்.


Bala Paddy
ஜூலை 26, 2024 15:33

உச்ச நீதி மன்றம் ரேபார்ம் தேவை.


Sridhar
ஜூலை 26, 2024 13:12

என்னங்க பெரிய வெற்றி வெற்றின்னுட்டு மாநில அரசுக்கு கனிம வளங்களை கொள்ளை அடிக்க முழு உரிமை இருக்குன்னா தீர்ப்பு குடுத்துருக்காங்க? இப்போ இதுனால எங்களுக்கு தலைவலிதான் ஜாஸ்தி ஆகும். கனிமவள கொள்ளைகள் பிடிபடும்போது ED லெந்து எதிர்க்கட்சிகள் வரை எல்லோரும் வரி இழப்பு ரொம்ப அதிகம்னு சொல்லுவாங்க


Rangarajan Cv
ஜூலை 26, 2024 11:07

This decision may impact cost of production as pointed in the article, all states which are rich in minerals will levy royalty. Similar to addl levy on petroleum products by state govt. SC has not solved the problem, it has set the new path, which is likely to be cost push up.


karunamoorthi Karuna
ஜூலை 26, 2024 09:38

மணல் ஜல்லி இவைகள் கனிமங்கள் தானே இவைகளை திருடி விற்பனை செய்வதால் வரி இழப்பு ஏற்படாதா


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 26, 2024 09:30

குடியரசு நாடாகி இத்தனை வருடங்களாகியும் இதில் ஒரு தெளிவு ஏற்பட சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாகின ..... வெட்ககரமானது ......


M S RAGHUNATHAN
ஜூலை 26, 2024 09:02

நாளையே தமிழக அரசு, நெய்வேலி கார்போரேஷனுக்கு வரி விதிக்கும்.கர்நாடகா காவிரி தண்ணீருக்கு வரி விதிக்கும். The judgement is bizarre.


M S RAGHUNATHAN
ஜூலை 26, 2024 08:59

மாபெரும் ஊழலுக்கு வழி வகுக்கும். There will be chaos and rat race between Mineral rich states and others. One of the worst judgements of SC. Does the present SC think that the judges who gave a different judgement in 1989 are fools and have no judicial sense. The dissenting judgement brings out what will be the future.


ஆரூர் ரங்
ஜூலை 26, 2024 07:40

இரும்பு, நிலக்கரி போன்ற பல கனிமங்கள் நமக்கு வேற்று மாநிலங்களிலிருந்து வருகின்றன. அவற்றுக்கு அந்தந்த மாநில அரசுகள் கூடுதல் வரி விதித்தால் அதிக பாதிப்பு நமக்குதான்.


sureshpramanathan
ஜூலை 26, 2024 06:09

Entire judiciary need overall All becoming kings of their courts and give all judgements as they wish There is no rule of law in India


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை