உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டாயமாகிறது ஆசிரியர் தகுதி தேர்வு!

கட்டாயமாகிறது ஆசிரியர் தகுதி தேர்வு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் உடனடியாக வேலையை ராஜினாமா செய்யலாம். அவர்கள் ஓய்வு பெறும் போது கிடைக்கும் சலுகைகளை, இப்போதே பெற்றுக்கொண்டு கட்டாய ஓய்வுக்கு எழுதிக் கொடுக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா என்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. ஏற்கனவே வழக்கு விசாரணை நடந்த போது, 'அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். அதன் விபரம்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற வேண்டும் என்றால், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில், ஓய்வு பெறும் வயதை எட்டுவதற்கு ஐந்தாண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கக்கூடிய அத்தனை ஆசிரியர்களும் தொடர்ந்து ஆசிரியராக பணியில் தொடர, ஆசிரியர் தகுதித் தேர்வில், நிச்சயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.தேர்வு எழுத விருப்பமில்லை என்றால், தாராளமாக அவர்கள் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியேறலாம்.அவர்கள், ஓய்வு பெறும் போது கிடைக்கும் சலுகைகளை பெற்று, இப்போதே கட்டாய பணி ஓய்வு பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் தகுதித் தேர்வை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியுமா என்பதை விசாரிப்பதற்காக அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 85,000 பேருக்கு சிக்கல்

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், தமிழகத்தில் அரசு பணியில் உள்ள, 85,000 ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:நீதிமன்ற தீர்ப்பால், ஆசிரியர் தகுதித்தேர்வான, 'டெட்' தேர்ச்சி பெற்று, 2012க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட 20,000 ஆசிரியர்களுக்கு பாதிப்பு இல்லை. அதேபோல, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களுக்கும் பாதிப்பில்லை. இவர்கள் தவிர்த்து, 2011க்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டு, அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் 85,000 பேர் தகுதித் தேர்வு எழுதவில்லை. அவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவர். நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்துவது குறித்தும், வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. நிதித்துறை செயலர், பள்ளிக்கல்வித் துறை செயலர் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலையில் அவசர ஆலோசனையும் நடத்தினர். இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழக உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் மாயவன் கூறுகையில், ''உச்ச நீதிமன்ற தீர்ப்பால், தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவு, அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்,'' என்றார்.இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்ககத்தின் மாநில பொதுச் செயலர் ராபர்ட் கூறுகையில், ''நீதிமன்ற உத்தரவு, ஆசிரியர்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், ஒரு லட்சம் ஆசிரியர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசு இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.இதற்கிடையில், இந்த தீர்ப்பை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் மேல்முறையீடு செய்ய தீர்மானிக்கப் பட்டுள்ளது.

டில்லி சிறப்பு நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை