டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக்கொன்றார் தந்தை
குருகிராம்: ஹரியானாவின் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் குருகிராமில் உள்ள சுஷாந்த் லோக்கில் வசித்தவர் ராதிகா யாதவ், 25; டென்னிஸ் வீராங்கனை. இவர் தேசிய அளவிலான போட்டியில் பல பதக்கங்கள் வென்றுள்ளார். இவர் வீட்டிலேயே டென்னிஸ் அகாடமி நடத்தி வந்தார். இது, அவரது தந்தை தீபக் யாதவுக்கு பிடிக்கவில்லை. இதனால் அகாடமியை மூடுமாறு மகள் ராதிகாவை வற்புறுத்தி வந்தார். இந்நிலையில், நேற்று காலை தீபக் திடீரென துப்பாக்கியால் ராதிகாவை சரமாரியாக ஐந்து முறை சுட்டார். இதில், மூன்று தோட்டாக்கள் அவர் உடலை துளைத்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த ராதிகாவை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இது குறித்து ராதிகாவின் சகோதரர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் தந்தையே மகளை கொன்றது உறுதியானது. எனினும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை.இதையடுத்து, தீபக் யாதவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.