உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு: 2 பேர் உடல் மீட்பு; 6 பேர் மாயம்

மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு: 2 பேர் உடல் மீட்பு; 6 பேர் மாயம்

இம்பால்: வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் ஜிர்பாம் மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் இருந்து, இரண்டு முதியவர்களின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. மேலும், ஆறு பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் கூகி, மெய்டி பழங்குடி இனத்தவர்களிடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், ஜிர்பாம் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ரரா போலீஸ் ஸ்டேஷனை, ஆயுதமேந்திய கூகி குழுவினர் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களுடன் வந்த அவர்கள், போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அங்கிருந்த துணை ராணுவ படை முகாம் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.இதில், ஒரு பிரிவினர் பிரிந்து சென்று, அருகில் உள்ள கிராமத்தின் கடைகள், வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அங்கு வந்த துணை ராணுவப் படையினர், வன்முறையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும் வன்முறை நிகழாமல் தடுப்பதற்காக ஜிர்பாம் மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்நிலையில், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மெய்டி முகாமிலிருந்த எட்டு பேரை காணவில்லை என போலீசார் தெரிவித்தனர். அவர்களை தேடும் பணி நடந்தது. அதில், 'மெய்டி இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன.'இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மூன்று பெண்கள், மூன்று குழந்தைகளை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடக்கிறது' என, போலீசார் கூறினர்.

ரோந்து பணி தீவிரம்

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தடுக்க பதற்றமான பகுதிகளில், அசாம் ரைபிள்ஸ், துணை ராணுவப் படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இரு இன குழுவினரிடையே நேற்று காலை துப்பாக்கிச் சூடு நடந்தது. அங்கிருந்து ஏராளமான வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை