உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு அலுவலகங்களை பூட்டி போராட்டம் அமைதியற்ற சூழலால் மணிப்பூரில் பதற்றம்

அரசு அலுவலகங்களை பூட்டி போராட்டம் அமைதியற்ற சூழலால் மணிப்பூரில் பதற்றம்

இம்பால், மணிப்பூரில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேரை கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் நேற்று அரசு அலுவலகங்களை பூட்டி போராட்டம் நடத்தினர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம், மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்ந்து, கலவரமாக மாறியது. இதில், 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.சமீபத்தில், ஜிரிபாம் மாவட்டத்தில் ஆயுதமேந்திய கூகி சமூக கிளர்ச்சியாளர்கள், மெய்டி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகளை கடத்திச் சென்றனர்.

ஊரடங்கு உத்தரவு

அவர்களின் சடலங்கள் இரு தினங்களுக்கு முன் அங்கிருந்த ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்டன. இதையடுத்து, மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. மெய்டி சமூகத்தினர் போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து, ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏழு மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களில், முதல்வர் பைரேன் சிங், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வீடுகள் தாக்கப்பட்டன. இந்நிலையில், இம்பாலின் மேற்கு மாவட்டத்தில், குழந்தைகள் உட்பட ஆறு பேரை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். லாம்பேல்பட்டில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து, அதன் பிரதான நுழைவாயிலின் கதவை சங்கிலிகள் மற்றும் பூட்டுகளால் பூட்டினர். இதேபோல் மேலும் சில அரசு அலுவலகங்களுக்கும் பூட்டு போட்டனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இது போன்ற போராட்டங்கள் தொடரும் என ஒருங்கிணைப்புக் குழுவினர் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே, ஜிரிபாம் மாவட்டத்தில் போலீசாருடன் நடந்த மோதலில், போராட்டக் காரர் ஒருவர் உயிரிழந்தார்.

கூடுதல் படைகள்

கலவரங்கள் அதிகரித்ததை அடுத்து, ஆயுதப் படை போலீசார் 5,000 பேரை மணிப்பூருக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அங்கு, ஏற்கனவே துணை ராணுவப் படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து ஆயுதப்படை போலீசார் 2,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சூழலில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இருந்து 3,500 பேரையும், எல்லைப் பாதுகாப்பு படையில் இருந்து 1,500 பேரையும் இந்த வார இறுதிக்குள் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாவது நாளாக ஆய்வு

மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து டில்லியில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக இரண்டாவது நாளாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார். அங்கு விரைவில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டி அமைதி திரும்ப உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !