உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜிம்ஸ் மருத்துவமனையில் மின் தடையால் பதற்றம்

ஜிம்ஸ் மருத்துவமனையில் மின் தடையால் பதற்றம்

கலபுரகி; கலபுரகி ஜிம்ஸ் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் பிரிவில் திடீரென மின்சாரம் தடைபட்டது. டாக்டர்கள் மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.கலபுரகியின் அரசு சார்ந்த ஜிம்ஸ் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், தற்போது ஏழு பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்பிரிவுக்கு மின்சாரம் வினியோகிக்கும் மின்மாற்றி பழுதடைந்தது.நேற்று முன்தினம் இரவு, திடீரென மின்சாரம் தடைபட்டது. இங்கிருந்த குழந்தைகளின் பெற்றோர் பீதி அடைந்தனர். டாக்டர்கள் மொபைல் போன் டார்ச் மூலம், குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர். அவற்றின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் சூழ்நிலை உருவானது.தகவலறிந்த மின் நிறுவன ஊழியர்கள், மின்மாற்றியை பழுது பார்த்தனர். இரண்டு மணி நேரத்துக்கு பின், மின்சாரம் வந்தது. அதன்பின் பெற்றோரும், டாக்டர்களும் நிம்மதி அடைந்தனர்.பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெறும் வார்டில், குறைந்த பட்சம் ஜெனரேட்டரோ அல்லது யு.பி.எஸ்., வசதியாவது செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த வார்டில் எந்த வசதியும் இல்லை. இதே வார்டில் ஐ.சி.யு., பிரிவும் உள்ளது.மின்சாரம் இல்லாமல் அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால், யார் பொறுப்பு என, நோயாளிகளின் உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ