முஸ்லிம் லீக்கின் நவீன வடிவம் தான் காங்., * விளாசி தள்ளுகிறது பா.ஜ.,
'முஸ்லிம் லீக் கட்சியின், நவீன வடிவமாகவே மாறிவிட்டது காங்கிரஸ். மதரீதியாக, நம் நாடு பிரிவினை அடையக் காரணமாக இருந்த, முகமது அலி ஜின்னாவை போலவே, காங்கிரஸ் நடந்து கொள்கிறது. இந்த நாட்டின் வளங்கள் அனைத்திலும், முஸ்லிம்களுக்கு தான் முன்னுரிமை என, அக்கட்சி நினைக்கிறது' என, பா.ஜ., விமர்சித்துள்ளது.முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு, வீட்டு வசதி திட்டங்களில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த, 10 சதவீத இட ஒதுக்கீட்டு உரிமையை, 15 சதவீதமாக உயர்த்துவதற்கு, நேற்று முன்தினம், கர்நாடகா மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.மத அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என, பா.ஜ., போர்க்கொடி உயர்த்தத் துவுங்கியுள்ளது. இந்நிலையில், இது குறித்து, நேற்று டில்லியில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனவாலா, நிருபர்களிடம் கூறியதாவது:முஸ்லிம் லீக் என்ற கட்சியின், தற்போதைய நவீன வடிவமாகவும், அதன் பிரதிநிதியுமாகவே மாறி விட்டது காங்கிரஸ். நாட்டின் பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் முகமது அலி ஜின்னா. மத அடிப்படையில், நாட்டை பிளந்த அந்த ஜின்னாவை போலவே, காங்கிரசும் நடந்து கொள்கிறது.இந்த நாட்டின் முக்கிய வளங்களில் எல்லாமே, முஸ்லிம்களுக்கு தான் முன்னுரிமை தர வேண்டும் என, அக்கட்சி நினைக்கத் துவங்கிவிட்டது.எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவு மக்களுக்கான இட ஒதுக்கீடுகளை, அவர்களிடமிருந்து காங்கிரஸ் பறித்துள்ளது. பறித்துக் கொண்ட அந்த உரிமைகளை, முஸ்லிம் சமூகத்திற்கு வழங்க துவங்கியுள்ளது.அம்பேத்கர் வகுத்து அளித்த, அரசியலமைப்பு சட்டத்திற்கு, முற்றிலும் முரணானது இது. சிவில் கான்ட்ராக்ட்கள் அனைத்திலுமே, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை, காங்கிரஸ் செய்துள்ளது.அரசியலமைப்பு சட்டத்தின் அம்சங்களுக்கு, இது எதிரானது. காங்கிரசை பொறுத்த வரையில், ஹிந்துக்கள் எல்லாம், அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இந்த சமூகத்தை, மத அடிப்படையில் பிரித்து, அதன் மூலம் ஆள்வதற்கும், தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும், காங்கிரஸ் முயல்கிறது.இது, முற்றிலும் சட்ட விரோதம்.இது தவிர, ஹிந்து சமூகத்தை, ஜாதி அடிப்படையில், திரும்ப திரும்ப பிரித்துக் கொண்டே இருக்கிறது. போலியான ஜாதி கணக்கீடு ஆய்வு நடத்தி, முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகம் என்பது போல காட்ட முயற்சித்தது. அந்த எடுபடாமல் போன பின், அந்த கணக்கீட்டு ஆய்வை, காங்கிரஸ் திரும்பப் பெற்றுக் கொண்டது.இந்நிலையில் தான், மற்றொரு வழியை கையாண்டுள்ளது. அதன் படி, மத அடிப்படையில், கூடுதல் இடப்பங்கீட்டை, முஸ்லிம்களுக்கு தர துவங்கியுள்ளது காங்கிரஸ். இதற்கு, அந்த கட்சி நடத்திவரும் ஓட்டு வங்கி அரசியலே, முக்கியமான காரணம்.இவ்வாறு அவர், கூறினார். - நமது டில்லி நிருபர் -