உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு

வயநாட்டை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு

வயநாடு, கேரளாவின் வயநாட்டில் பெண் ஒருவரை கொன்று அச்சுறுத்தி வந்த ஆட்கொல்லி புலி, நேற்று அதிகாலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. கேரளாவின் வயநாடு மாவட்டத்தின் பஞ்சரக்கொல்லி என்ற பகுதியைச் சேர்ந்த ராதா, 46, என்ற பெண், கடந்த 25ம் தேதி, வனப்பகுதியை ஒட்டிய தோட்டத்தில் காபிக் கொட்டைகளை பறிக்கச் சென்றார்.அப்போது அவரை புலி அடித்துக் கொன்றது. இதனால் பீதி அடைந்த அப்பகுதி மக்கள், புலியை சுட்டு பிடிக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் ஆலோசனை நடத்திய கேரள அரசு, அந்த புலியை ஆட்கொல்லி புலியாக அறிவித்து, அதை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது. இதையடுத்து, புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும், புலியின் அச்சுறுத்தலால், பஞ்சரக்கொல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், மக்கள் வெளியே வராதபடி ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், வயநாட்டின் பிலக்காவு தோட்டத்திற்குள், நேற்று அதிகாலை 2:30 மணி அளவில், கழுத்தில் ஆழமான காயங்களுடன், ஆட்கொல்லி புலி இறந்து கிடந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரு நாட்களுக்கு முன், ராதாவை அடித்துக் கொன்றது இந்த புலி தான் என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். புலியின் இறப்புக்கான காரணம் குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஒருவழியாக புலி இறந்ததால், பஞ்சரக்கொல்லி பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை