குப்பை எரிப்பதை தடுக்க பிரசாரம் இன்று துவக்கம்
புதுடில்லி,:அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த, பொதுவெளியில் குப்பை எரிப்பதை தடுக்கும் விழிப்புணர்வு பிரசாரம் துவங்குகிறது.இதுகுறித்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:தலைநகர் டில்லியில் தீபாவளி பண்டிகைக்குப் பின் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு திட்டமாக, பொதுவெளியில் குப்பை எரிப்பதை தடுக்கும் விழிப்புணர்வு பிரசாரம் இன்று துவக்கப்படுகிறது. இதற்காக, 588 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழு மாநகர் முழுதும், குப்பை எரிப்பை தடுக்கும் பிரசாரத்தை செய்யும். மாநகரின் பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400-ஐ தாண்டியுள்ளது. அடுத்த 10 நாட்கள் மிக முக்கியமானவை. காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவர 33 துறைகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. டில்லியில் செயற்கை மழைக்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு இரண்டு முறை கடிதம் அனுப்பியுள்ளேன்.குளிர்கால செயல் திட்டம் அமலானதில் இருந்து, 7,900 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.விதிமுறை மீறிய 428 பேரிடம் 63 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். அபாயநிலை
டில்லியில் நேற்று காலை 9:00 மணிக்கு காற்றின் சராசரி தரக் குறியீடு 384 ஆக இருந்தது. இதுவே நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு 381 ஆக இருந்தது. ஆனந்த் விஹார், அசோக் விஹார், துவாரகா, துவாரகா, நேரு நகர், மோதி மார்க், சோனியா விஹார், விவேக் விஹார், வஜிர்பூர், ரோஹிணி, பஞ்சாபி பாக், முண்ட்கா மற்றும் ஜஹாங்கிர்புரி ஆகிய இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400ஐ தாண்டியது.இது அபாயகரமான நிலை என கூறியுள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மக்களுக்கு உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டும் வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 94 சதவீதமாக இருந்தது.