உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  முதல்வர் - மத்திய அமைச்சர் இடையே மோதல் விஸ்வரூபம்! கைது செய்வேன் என சித்தராமையா பகிரங்க மிரட்டல்

 முதல்வர் - மத்திய அமைச்சர் இடையே மோதல் விஸ்வரூபம்! கைது செய்வேன் என சித்தராமையா பகிரங்க மிரட்டல்

பெங்களூரு: ''குமாரசாமியை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்வோம்,'' என முதல்வர் சித்தராமையா பகிரங்க மிரட்டல் விடுத்தார். இதற்கு, ''என்னை கைது செய்ய, 100 சித்தராமையாக்கள் வர வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் குமாரசாமி பதிலடி கொடுத்தார். அதற்கு, ''அவரை கைது செய்ய, ஒரே ஒரு ஏட்டு போதும்,'' என, முதல்வர் பதிலடி கொடுத்துள்ளதால், இருவரிடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.'மூடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையாவிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணை நடத்த, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், கடந்த 17ம் அனுமதி அளித்தார்.இதற்கிடையில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் முருகேஷ் நிரானி, சசிகலா ஜொல்லே, ஜனார்த்தன ரெட்டி ஆகியோரும் முறைகேடு செய்துள்ளதாகவும், அவர்கள் மீது விசாரணை நடத்த கவர்னரிடம் அனுமதி கோரி, பல மாதங்கள் ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தன் மீது மட்டும் அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் குற்றஞ்சாட்டினார்.

நீதிமன்றத்தில் பதில்

உயர் நீதிமன்றத்தில் முதல்வர் தாக்கல் செய்த ரிட் மனுவிலும், இதையே குறிப்பிட்டிருந்தார். ஆனால், கவர்னர் முன் எந்த கோப்பும் நிலுவையில் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் கவர்னர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், குமாரசாமி மீதான சுரங்க முறைகேடு வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்கும்படி, கவர்னரிடம், மாநில அரசின் சிறப்பு பலனாய்வு குழு, கடிதம் வாயிலாக நேற்று முன்தினம் கோரிக்கை வைத்துள்ளது. இது, காங்., அரசின் பழிவாங்கும் செயலாக பார்க்கப்படுகிறது.ஆனால், தங்களுக்கும், குமாரசாமி மீது விசாரணை நடத்த கவர்னரிடம் அனுமதி கேட்ட விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் கூறினர். ஆயினும், தன் விஷயத்தில் காண்பித்த அவசரத்தை, குமாரசாமி விஷயத்தில் ஏன் கவர்னர் காண்பிக்கவில்லை என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார்.

தயவு தாட்சண்யம்

இந்நிலையில், கொப்பாலில் முதல்வர் சித்தராமையா நேற்று கூறியதாவது:குமாரசாமியை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்வோம். தற்போதைக்கு கைது செய்வதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை. ஆனாலும், அவர் இப்போதே பயந்து போயுள்ளார்.தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கவர்னர் அனுமதி அளிப்பார் என்ற பயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சிறப்பு புலனாய்வு குழு அளித்த மனு மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக, மீண்டும் ஒருமுறை மனு அளித்துள்ளனர்.ஆவணங்கள் பரிசீலனைக்கு பின், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கவர்னர் அனுமதி அளிப்பார். குமாரசாமி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு தப்பி ஓடிவிடுகிறார். ஏதோ பென்டிரைவ் இருப்பதாக கூறிய அவர், ஒரு நாளும் காண்பிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

ஏட்டு போதும்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெங்களூரில் குமாரசாமி கூறுகையில், ''என்னை கைது செய்ய ஒரு சித்தராமையா அல்ல, 100 சித்தராமையாக்கள் வர வேண்டும். எனக்கு எந்த பயமும் இல்லை. கடந்த ஓராண்டு ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியில் என்னென்ன முறைகேடுகள் நடந்தன என்று மக்களுக்கு நன்றாக தெரியும்,'' என்றார்.இது குறித்து, சித்தராமையா கூறுகையில், ''குமாரசாமியை கைது செய்ய, 100 சித்தராமையா தேவை இல்லை. ஒரே ஒரு ஏட்டு போதும்,'' என்றார்.சித்தராமையா - குமாரசாமி இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ