பாழடைந்து கிடந்த இடம் பட்டாம் பூச்சி பூங்காவானது
மங்களூரின் இதய பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கம் அருகில், 4 ஏக்கரில் அழகான பட்டாம்பூச்சி பூங்கா அமைந்துள்ளது. இதற்கு அதலெடிக் ரவிராஜும் காரணம்.சமீப நாட்களாக பலரும் பிட்னசுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதற்காக சிலர் ஜிம்முக்கு செல்கின்றனர். சிலர் பூங்காக்களில் நடை பயிற்சி செய்கின்றனர். இது போன்று மங்களூரின் மங்களா விளையாட்டு அரங்கம் அருகில் நடை பயிற்சிக்கு சென்ற இரண்டு நண்பர்கள், பாழடைந்து கிடந்த இடத்தை பசுமையான பூங்காவாக மாற்றியுள்ளர்.* அரங்கம் பாழ்தட்சிணகன்னடா, மங்களூரின் இதய பகுதியில் மங்களா விளையாட்டு அரங்கம் உள்ளது. இதை ஒட்டியுள்ள 4 ஏக்கர் நிலத்தில், குப்பைகள் கொட்டப்பட்டதால், பாழடைந்து கிடந்தது. டிராவல் ஏஜென்சி ஊழியர் ரவிராஜ் ஷெட்டி, விப்ரோ நிறுவன முன்னாள் ஊழியர் ஸ்ரீகுமார், தினமும் இந்த வழியாக நடை பயிற்சிக்கு செல்வர். இவர்கள் இருவரும் நண்பர்கள்.உடுப்பி, குந்தாபுராவின் சிவபுராவை சேர்ந்த ரவிராஜ் ஷெட்டி, தற்போது மங்களூரில் வசிக்கிறார். நீளம் தாண்டுதல் விளையாட்டு வீரர். மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப்பில், இரண்டாவது இடம் பெற்றவர். இவர் தன் நண்பர் ஸ்ரீகுமாருடன் தினமும் மங்களா விளையாட்டு அரங்கம் அருகில் நடை பயிற்சி செய்வது வழக்கம். கூடைப்பந்து வளாகத்தில் குப்பை, மதுபான பாட்டில்கள் குவிந்து கிடப்பதை பார்த்து இருவரும் வருத்தம் அடைந்தனர்.தினமும் நடை பயிற்சிக்கு வரும் போது, அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு செல்வர். முற்றிலுமாக சுத்தம் செய்ய ஒன்றரை மாதம் ஆனது. அதன்பின் அங்கு செடிகள் நட துவங்கினர். செடிகளில் பூக்கள் மலர்ந்ததால், பட்டாம்பூச்சிகள் வர துவங்கின. தற்போது 4 ஏக்கரில் செடிகள் நடப்பட்டு, பட்டாம்பூச்சி பூங்காவாக மாறியுள்ளது.குப்பை கொட்டும் இடம், இப்போது பொதுமக்கள் ரசிக்கும் அழகான பூங்காவாக மாறியுள்ளது. இரண்டு நண்பர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.இது குறித்து ரவிராஜ் கூறியதாவது:மங்களா விளையாட்டு அரங்கில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. பெருமளவில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்கின்றனர். இத்தகைய விளையாட்டு அரங்கத்தின் அருகில் குப்பை குவிந்து கிடந்ததால், சுற்றுச்சூழல் அசுத்தமானது. விளையாட்டு வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.இதை பார்த்து எங்களுக்கு வருத்தம் ஏற்பட்டது. இதை சுத்தம் செய்தோம். செடிகள் நட்டு, பட்டாம்பூச்சி பூங்காவை உருவாக்கினோம். ஒரு காலத்தில் குப்பை கொட்டும் இடம், இன்று அழகான பூங்காவானது மகிழ்ச்சி அளிக்கிறது. மங்களா விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள இடத்தில், 20,000 செடிகள் உள்ளன.மல்லிகை, செம்பருத்தி, ரோஜா, கொய்யா, நாவல், பப்பாளி, மாம்பழம், எலுமிச்சை, பலா உட்பட பல்வேறு பழ மரக்கன்றுகளை நட்டுள்ளோம். குறிப்பாக பறவைகளுக்கு பிரியமான பழங்கள் இங்குள்ளன. இதற்கு முன் செடிகளை பராமரிக்க, மங்களா விளையாட்டு அரங்கத்தில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தது. எனவே தற்போது மங்களூரு மாநகராட்சி தண்ணீர் வினியோகிக்கிறது. செடிகளின் உலர்ந்த இலை, தழைகளே உரமாக பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.....புல் அவுட்...இரண்டு நண்பர்கள், மங்களா விளையாட்டு அரங்கின் பக்கத்தில், அசுத்தமாக இருந்த இடத்தை, ஏழு ஆண்டுகளில் அற்புதமான பூங்காவாக மாற்றியுள்ளனர். இவர்களின் முயற்சியால், விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சி செய்வோர், விளையாட்டு பயிற்சி பெறுவோருக்கு சுகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ரவிராஜ் மற்றும் ஸ்ரீகுமாரின் சேவை பாராட்டத்தக்கது.- சுதர்ஷன், விளையாட்டு பயிற்சியாளர், மங்களா விளையாட்டு அரங்கம்.*** - நமது நிருபர் -