தசரா தர்ஷினி சுற்றுலா பேக்கேஜ் திட்டம் 9 அம்மன் கோவில்களை தரிசிக்க வாய்ப்பு
மங்களூரு: மங்களூரில் கே.எஸ்.ஆர்.டி.சி., அறிமுகம் செய்த 'தசரா தர்ஷினி' சுற்றுலா பேக்கேஜ் திட்டத்துக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.நவராத்திரி நேரத்தில் அம்மன் கோவில்களை தரிசிக்க பக்தர்கள் விரும்புவர். தட்சிண கன்னடா மங்களூரில் அம்மன் கோவில்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த கோவில்களை பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தசரா தர்ஷினி திட்டத்தை கே.எஸ்.ஆர்.டி.சி., அறிமுகம் செய்தது. இதற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.இம்முறையும் தசரா தர்ஷினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் சென்று, மங்களூரின் ஒன்பது அம்மன் கோவில்களை தரிசிக்கலாம்.இதுதொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:l தசரா தர்ஷினி திட்டத்தின் கீழ், மரோளி, மங்களாதேவி, சுங்கதகட்டே, கட்டீலு, பப்பனாடு, சசிஹித்லு, சித்தாபுரா, ஊர்வா மாரியம்மன், குத்ரோலி கோவில்களை தரிசிக்கலாம். உணவு, சிற்றுண்டியை தவிர்த்து பயண கட்டணம் பெரியவர்களுக்கு 400 ரூபாய், ஆறு வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.l மங்களூரு - கொல்லுார் பேக்கேஜ்: மங்களூரு பஸ் நிலையத்தில் இருந்து, காலை 8:00 மணிக்கு புறப்பட்டு, உச்சில ஸ்ரீ மகாலட்சுமி கோவில், கமலஷிலே பிராம்ஹி துர்கா பரமேஸ்வரி கோவில், கொல்லுார் மூகாம்பிகை, மாரனகட்டே பிரம்ம லிங்கேஸ்வர் கோவில் தரிசனத்தை முடித்து, இரவு 7:00 மணிக்கு மங்களூரு திரும்பும். இதில் பெரியவர்களுக்கு 500 ரூபாய், குழந்தைகளுக்கு 400 ரூபாய் கட்டணம் ஆகும்.l மடிகேரி பேக்கேஜ்: மங்களூரில் இருந்து, காலை 7:00 மணிக்கு புறப்பட்டு மடிகேரி, ராஜாசீட், அப்பி நீர்வீழ்ச்சி, நிசர்கதாமா மற்றும் பொற்கோவிலை சுற்றி பார்த்த பின், இரவு 9:00 மணிக்கு மங்களூரு பஸ் நிலையத்திற்கு திரும்பும். பெரியவர்களுக்கு 500 ரூபாய், குழந்தைகளுக்கு 400 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.l மங்களூரு -- முருடேஸ்வரா பேக்கேஜ்: காலை 7:00 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்படும் பஸ், முருடேஸ்வரா கோவில், சண்டிகா ஸ்ரீ துர்காபரமேஸ்வரி, ஆனேகுட்டே கணபதி கோவில், உச்சில ஸ்ரீ மகாலட்சுமி கோவிலை தரிசனம் செய்து, இரவு 7:00 மணிக்கு மங்களூருக்கு திரும்பும். பெரியவர்களுக்கு டிக்கெட் விலை 550 ரூபாய். குழந்தைகளுக்கு 450 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.சிறப்பு பேக்கேஜ் திட்டம், 'சக்தி' திட்டத்துக்கு பொருந்தாது. பெண்கள் உட்பட, அனைவரும் முழுமையான கட்டணம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.