வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் ஷக்தி: அக்., 7 வரை மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மும்பை: அரபிக்கடலில் உருவாகியுள்ள ஷக்தி புயல் தீவிரமடைவதால், மஹாராஷ்டிரா, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வரும் 9ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது; இது, தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு நம் அண்டை நாடான இலங்கை பரிந்துரைத்த, 'ஷக்தி' என பெயரிடப்பட்டு உள்ளது. புயல் மையம் தற்போது, குஜராத்தின் நலியாவில் இருந்து 270 கி.மீ., துாரத்திலும், போர்பந்தரில் இருந்து 300 கி.மீ., தொலைவிலும் ஷக்தி புயல் மையம் கொண்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான முதல் புயலான இது, மணிக்கு 8 -கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், மஹாராஷ்டிராவின் கடற்கரையை ஒட்டிய மும்பை உள்ளிட்ட நகரங்களில், வரும் 7ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது: ஷக்தி புயல் மேலும் தீவிரமடைந்து, விரைவில் வட அரபிக்கடல் பகுதியை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மஹாராஷ்டிராவில் மும்பை, தானே, ராய்காட், பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய இடங்களில் நாளை மறுநாள் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்று மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். குஜராத், ஒடிஷாவின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரின் குல்மார்க்கில்
முதல் பனிப்பொழிவு
ஜம்மு - காஷ்மீரில் குளிர்காலம் துவங்கியுள்ளது. இதையடுத்து, இங்குள்ள முக்கிய குளிர் பிரதேசமான குல்பர்க்கில், முதல் பனிப்பொழிவு நேற்று துவங்கியது. அபார்வாட் சிகரம் உட்பட சுற்றியுள்ள மலைப்பகுதிகளை மறைத்தபடி பெய்த பனிப்பொழிவு, ரம்மியமான சூழலை உருவாக்கியது. மழைக்காலம் முடிந்து, குளிர்காலம் துவங்கியதை குறிக்கும் இந்த பனிப்பொழிவு, அடுத்தாண்டு பிப்ரவரி வரை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.