உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் பிரபலமாகும் பறக்கும் தட்டு விளையாட்டு

கர்நாடகாவில் பிரபலமாகும் பறக்கும் தட்டு விளையாட்டு

இந்தியாவில் விளையாட்டு என்றவுடன் பெரும்பாலானோரின் நினைவிற்கு வருவது கிரிக்கெட் தான். கிரிக்கெட்டின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுவதால், மற்ற விளையாட்டுகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பது கடினமான வேலையாக இருக்கிறது. இதே வேளையில் சற்று வித்தியாசமாகவும், பார்ப்பதற்கு ஆர்வத்தை துாண்டும் வகையில் இருக்கும் விளையாட்டுகளுக்கு எப்போதும் மவுசு உண்டு.அவ்வகையில், கர்நாடகாவில் ஒரு விளையாட்டு பிரபலம் அடைந்து வருகிறது.

19ம் நுாற்றாண்டு

பல ஆண்டுகளுக்கு முன், குடிக்கும் பானமான, 'பூஸ்ட் டப்பா' வாங்கினால் ஒரு தட்டை இலவசமாக தந்தனரே; அந்த தட்டை மேலே துாக்கி எறிந்து பிடித்து விளையாடினோமே; ஞாபகம் உள்ளதா. அதே போல, சற்று வித்தியாசமான வடிவமுள்ள தட்டை வைத்து கடற்கரை, புல் தரைகளில் விளையாடும் விளையாட்டு தான் பிரிஸ்பீ. இது 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது நுாற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவும் உள்ளது.பறக்கும் தட்டுகளை, 1968ல் வாம் ஓ என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த தட்டுகள், உறுதியாக இருந்ததால் விளையாட்டின் மோகம் அதிகரிக்க காரணமாக இருந்தது. இதன் காரணமாக 'அல்டிமேட் பிரிஸ்பீ, ப்ரீஸ்டைல் பிரிஸ்பீ' எனும் விளையாட்டுகள் உருவாகின என்பது வரலாறு.தற்போது இந்த விளையாட்டு இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, கோவா, கேரளா, ராஜஸ்தான், உ.பி., மாநிலங்களில் பரவி வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது.இந்த விளையாட்டை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடலாம். விளையாடுவதற்கு ஒரு தட்டு மட்டும் போதும் என்பதால் பலரும் விரும்பி விளையாடுகின்றனர்.குறிப்பாக கடற்கரைகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விளையாடுகின்றனர். இளைஞர்கள் சிலர், இரு அணிகளாக பிரிந்து விளையாடுகின்றனர். இந்த விளையாட்டு மிகவும் எளிது. பார்ப்பதற்கு கால் பந்து, ரக்பி போன்ற விளையாட்டுகள் போலவே இருக்கும். தட்டு தரையில் விழாமல், எதிரணி வீரர்களை தாண்டி எல்லைக்கோட்டிற்கு சென்றால் புள்ளிகள் தரப்படும்.

அடுத்த கட்டம்

இது குறித்து, கே.யு.பி.ஏ., எனும் கர்நாடகா அல்டிமேட் விளையாட்டு வீரர்கள் சங்க பொது செயலர் ஐஸ்வர்யா கூறியதாவது:இந்தியாவிலேயே கர்நாடகாவில் தான் பிரிஸ்பீ விளையாட்டு மிகவும் பிரபலமாகி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விளையாடுகின்றனர். இது மட்டுமின்றி பெங்களூரில் 'அல்டிமேட் ப்ரிஸ்பீ ஊட்டி' நடந்தது. இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொண்டன. மேலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு இடையிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் இந்த விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்.நான் 2016ம் ஆண்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும்போது முதல் முறையாக பிரிஸ்பீ விளையாட்டை விளையாடினேன். அதன் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் முழு நேர பிரிஸ்பீ வீரராக மாறிவிட்டேன். படிப்படியாக உயர்ந்து பிரிஸ்பீயில் கர்நாடக மாநில பொதுச் செயலராக ஆகிவிட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.இவர் மட்டுமல்ல, தற்போது மாநிலத்தில் உள்ள பல கடற்கரைகளில் ஆண்களும், பெண்களும் பறக்கும் தட்டை வைத்து விளையாடி வருகின்றனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !