ஜி.பி.எஸ்., பொருத்திய பருந்தால் பரபரப்பு
உத்தரகன்னடா: கார்வார் அருகில், ஜி.பி.எஸ்., டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்ட பருந்து சுற்றி வருகிறது. இதனால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.உத்தரகன்னடா, கார்வார் அருகில் கோடிபாகின் சுற்றுப்பகுதிகளில் ஐந்து நாட்களாக, ஒரு பருந்து பறந்தது. தினமும் பறந்ததால் சந்தேகமடைந்த சிலர், கேமரா மூலம் ஜூம் செய்து பார்த்த போது, ஜி.பி.எஸ்., டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டிருப்பது தெரிந்தது.உன்னிப்பாக பார்த்த போது, பருந்தின் காலில் டாக், முதுகின் மீது ஜி.பி.எஸ்., டிரான்ஸ்மீட்டர் இருப்பதை பார்த்து அப்பகுதியினர் பீதி அடைந்தனர். எதிரி நாடுகள், பயங்கரவாதிகள் பருந்து மூலம் கண்காணிக்கலாம் என, சந்தேகம் அடைந்தனர்.கார்வாரில் துறைமுகம், அனல்மின் உற்பத்தி நிலையம் இருப்பதால், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் வனத்துறை, போலீசார், மாநில ஐ.பி., அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தனர்.பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி நிறுவனம், ஆராய்ச்சி செய்யும் நோக்கில், பருந்தை பறக்க விட்டது தெரிந்தது. பருந்துகளின் வாழ்க்கையை பற்றி, ஆராய்ச்சி செய்ய பருந்து முதுகில் mahaforest.gov.inஎன எழுதப்பட்ட டிரான்ஸ்மீட்டர் பொருத்தி, பறக்க விடப்பட்டது தெரிந்தது.அதன்பின் அதிகாரிகளும், பொது மக்களும் நிம்மதி அடைந்தனர். வனத்துறை ஊழியர்கள், அந்த பருந்துக்கு உணவளித்தனர்.