உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்ம மெட்ரோவில் பயணம் செய்த கல்லீரல்

நம்ம மெட்ரோவில் பயணம் செய்த கல்லீரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'பெங்களூரு மெட்ரோ ரயில் வரலாற்றில், முதன் முறையாக ஒயிட்பீல்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ராஜராஜேஸ்வரி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக கல்லீரல் கொண்டு செல்லப்பட்டது' என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது. பெங்களூரு - மைசூரு சாலையில் உள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவருக்கு கல்லீரல் தானம் வழங்கிய நோயாளி, ஒயிட்பீல்டு வைதேகி மருத்துவமனையில் இருந்தார். இங்கிருந்து பெறப்படும் கல்லீரலை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து டாக்டர்கள் குழு ஆலோசனை நடத்தினர். சாலை மார்க்கத்தில் கொண்டு செல்வதென்றால், நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இவ்விரு மருத்துவமனைக்கு இடையே 31 கி.மீ., துாரம். மனித உறுப்பை ஆம்புலன்சில் கொண்டு செல்ல 'ஜீரோ டிராபிக்' எனும் போக்குவரத்து இல்லா சாலை முறையை ஏற்படுத்த வேண்டும். அது நகரில் கூடுதல் போக்குவரத்து சிக்கலை உருவாக்கும். ஆனால் எவ்வளவு விரைவாக சென்றாலும் இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால், அது தவிர்க்கப்பட்டது. இதனால் மெட்ரோ ரயிலில் கல்லீரலை எடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது. இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் டாக்டர்கள் ஆலோசனை நடத்தினர். அதன்படி எந்தவித இடையூறும் சிறப்பு ஏற்பாடுகளும் இன்றி வழக்கமான ரயில் சேவையிலேயே கல்லீரலை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஏற்கனவே திட்டமிட்டபடி, ஒயிட்பீல்டு மருத்துவமனையில் இருந்து அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி, உரிய ஏற்பாடுகளுடன் கல்லீரல் ஆம்புலன்சில் ஒயிட்பீல்ட் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அன்று இரவு 8:38 மணிக்கு ஒயிட்பீல்டு ரயில் நிலையத்துக்கு கல்லீரலுடன் மருத்துவக்குழுவினர் வந்தனர். முறையான சோதனைக்கு பின் ரயிலுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மெட்ரோ ரயிலில் கல்லீரலை எடுத்துக் கொண்டு மருத்துவக்குழுவினர் இரவு 8:42 மணிக்கு பயணத்தைத் துவக்கினர். அந்த ரயில் வழியில் இருந்த அனைத்து ரயில் நிலையங்களிலும் வழக்கம்போல் நின்று, இரவு 9:48 மணிக்கு ராஜராஜேஸ்வரி மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்தது. அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் ஸ்பார்ஷ் மருத்துவமனைக்கு கல்லீரலுடன் மருத்துவக்குழுவினர் சென்றனர். உடனடியாக நோயாளிக்கு கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இரு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மருத்துவக்குழுவினருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. திட்டமிட்டவாறு தாமதமின்றி அவர்கள் இலக்கை அடைய மெட்ரோ பணியாளர்கள் உதவி செய்தனர். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் கூட்டு நடைமுறை உத்தரவு ஆகியவற்றின் வழிகாட்டுதல்கள் பின்பற்றி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் உறுப்பு போக்குவரத்துக்கு மெட்ரோ ரயில் பயன்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். பெங்களூரில் இது முதன்முறை. இதற்கு முன்பு தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதின் எல்.பி., நகர் கமிநேனி மருத்துவமனையில் இருந்து லக்திகாபாலில் உள்ள கிளெனிகல்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு ஹைதராபாத் மெட்ரோ ரயில் மூலம், ஜன., 18ம் தேதி இதயம் கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஆக 03, 2025 09:00

வாழ்க பாரதம். "சாலை மார்க்கத்தில் கொண்டு செல்வதென்றால், நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்" இவ்வளவு area வுக்கு இவ்வளவு vehicles தான் இருக்கவேண்டுமென்று சட்டம் இயற்றலாம் அதை விட்டுவிட்டு இன்னும் அதிகமாக வண்டிகளை உற்பத்தி செய்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் மேம்பாலங்கள் வேறு அதிலும் traffic jam


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை