உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாலத்தீவின் மனமாற்றமும் இந்தியாவின் பெருந்தன்மையும்

மாலத்தீவின் மனமாற்றமும் இந்தியாவின் பெருந்தன்மையும்

நம் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த வார மாலத்தீவு பயணம், அந்த நாட்டின் சமகால வரலாற்றில் சில புதிய நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது. மாலத்தீவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு வெளிநாட்டு தலைவர்கள் யாரும் அழைக்கப்படுவதில்லை. அந்த மரியாதை முதல் முறையாக நம் பிரதமருக்கு அளிக்கப்பட்டது. மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு பதவியேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில், அந்நாட்டிற்கு முய்சுவின் அழைப்பின் பேரில் பயணம் செய்த முதல் தலைவர் மோடியே ஆவார். பிரதமரின் வருகையை மாலத்தீவு அரசு விழா போல் கொண்டாடியது. தலைநகர் மாலே விமானநிலையத்தில் நேரடியாக வந்து பிரதமரை வரவேற்றதாகட்டும், பின்னர் நடந்த அதிகாரப்பூர்வ வரவேற்பில் அளித்த 21 -குண்டு மரியாதை ஆகட்டும், அதிபர் முய்சுவின் அரசு இந்திய விருந்தினருக்கு எந்தவொரு குறையும் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கருத்தாக இருந்தது. தன் மாலத்தீவு பயணத்தின் போது, பிரதமர் மோடி அந்த நாட்டிற்கு 5,000 கோடி ரூபாய் மதிப்பு உதவிகளை அறிவித்தார். இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட 4,000 வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார்.

ஆரவார வரவேற்பு

கடந்த ஆண்டுகளில் இந்திய உதவியுடன் நிறைவேற்றப்பட்ட பல்வேறு கட்டமைப்புகளையும் துவக்கி வைத்தார். இவை தவிர, இரண்டு நாடுகளும் எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. அதில், இரு நாடுகளுக்கு இடையே தடையில்லா வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை துவக்குவதற்கான ஒப்பந்தமும் அடங்கும். முய்சு அரசால் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் சீனாவுடன் தடையில்லா வர்த்தகம் செயல்படுத்தப்பட்டது. இது மாலத்தீவிற்கு அதீத அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதை தொடர்ந்தே இந்தியா இந்த முன்னெடுப்பை செய்துள்ளது. இந்த பயணத்தில் பிரதமருடன் நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட உயர்நிலை குழுவும் சென்றிருந்தது. அந்த நாட்டின் தலைநகரில் மோடி தங்கியிருந்த இரு நாட்களிலும் அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு அவரை வரவேற்றனர். சமூக வலைதள பதிவுகளை வைத்து பார்க்கும்போது, அவர்கள் தங்கள் தலைவரை அந்த அளவிற்கு நம்பவில்லை என்ற எண்ணமே தோன்றியது. இந்தியாவின் உதவியுடன், பிரதமர் மோடியின் ஆசியுடன் மட்டுமே தங்களது நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவை சீர்படும் என்ற எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.

அரசியல் முதிர்வின்மை

சர்வதேச அரசியல் குறித்த ஆழ்ந்த அறிவு இல்லாத முய்சு, தான் பதவியேற்ற முதல் சில மாதங்களில் நம் நாட்டை குறித்து தெரிவித்த கருத்துக்கள் மற்றும் எடுத்த முடிவுகள் எல்லாம், அவரது வன்மத்தையே காட்டியன. பதவியேற்ற சில வாரங்களில் இந்தியா எதிர்ப்பு நாடுகளான துருக்கி மற்றும் சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட முய்சு, பீஜிங்கில் இருந்து திரும்பி வந்த கையோடு, இந்தியாவை மட்டுமே நம்பி தன் நாடு இல்லை என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களை துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தார். சரக்கு கட்டண உயர்வு, செங்கடலில் ஹவுதி படையினரின் தாக்குதல் போன்றவற்றால் அது பகல் கனவானது. எனவே, இன்றளவும் மாலத்தீவுக்கான பெரும்பாலான உணவு பொருட்கள் நம் துாத்துகுடி துறைமுகத்தில் இருந்து தான் அனுப்பப்படுகின்றன. இது ஒரு புறமிருக்க, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, முய்சுவின் அரசு, தன் நாட்டின் பொருளாதார பிரச்னையை எதிர்கொள்ள சீனா உதவும் என்ற தவறான நம்பிக்கையில் அவசியமே இல்லாமல் இந்தியாவை குறை கூறினார். அண்டை நாடான இலங்கையின் பொருளாதார பிரச்னையில் சீனாவின் இரட்டை வேடம் கலைந்த பிறகும் முய்சு பாடம் கற்கவில்லை. இலங்கைக்கும் இந்தியா தான் தொடர்ந்து பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. இவற்றின் காரணமாகவும் முய்சு தற்போது மனம் மாறி உள்ளார்.

தவறான கருத்து

பிரதமர் மோடியுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், இந்தியா ஒரு 'ஆதரவான, நம்பிக்கைக்குரிய நாடு' என்று புகழாரம் சூட்டினார். இந்திய அரசு மாலத்தீவிற்கு மனிதாபிமானமாக பரிசளித்த மூன்று விமானங்களை சிவில் விமானிகள் மூலம் செயல்படுத்தும் ஒப்பந்தத்தையும் நீட்டித்துள்ளார். முய்சு கடந்த 2023 தேர்தலில், 'இந்தியா வெளியேறு' என்ற முன்னாள் அதிபர் அப்துல்லா யாமினின் கோஷத்தின் அடிப்படையிலேயே வெற்றிபெற்று அதிபரனார் என்ற கருத்தும் தவறானது. மாறாக, அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் சோலிஹின் அரசின் செயல்பாடு மற்றும் ஆளுங் கட்சியின் உள்குத்துகள் ஆகியவற்றின் காரணமாகவே முய்சு வெற்றிபெற்றார். இருப்பினும் பதவியேற்ற பின், முய்சு இந்தியாவிற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தார். அந்த நிலையில் இருந்து தற்போது முழுதுமாக மாறி, இந்தியா மட்டுமே தன் நாட்டின் நம்பிக்கைக்குரிய நண்பன் என்ற முடிவை அவர் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. -என்.சத்திய மூர்த்தி சர்வதேச அரசியல் ஆய்வாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
ஜூலை 29, 2025 11:25

யாரோட குடுமியும் சும்மா ஆடாது.


vivek
ஜூலை 29, 2025 18:42

உனக்கு குடுமி இருக்கும்...அதுக்குள்ள மூளை இருக்குமா அப்புசாமி


தத்வமசி
ஜூலை 29, 2025 09:53

இந்தியாவின் பெருந்தன்மையே நாடு பல துண்டுகளாக ஆவதற்கு காரணமாக இருந்தது.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 29, 2025 08:59

பெருந்தன்மை காட்டுவதில் தவறில்லை .... அதே சமயம் அதை நமது காலனியாக்க நாடுபோல ஆக்கி பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் ..... எதிரியின் பலவீனத்தைப் பயன்படுத்தி தன்னை வலுவாக்கிக்கொள்ளுதல் சாணக்கியர் வகுத்த நெறி .....


Padmasridharan
ஜூலை 29, 2025 07:36

பணம் கொடுத்தால் யார் காலில் விழவேண்டுமானாலும் விழுவார்கள் மற்றும் இந்தியர்களை பணத்துக்காக வேலை செய்பவர்களென்று குறைகள் சொல்லக்கூடியவர்கள் மாலத்தீவில் பலரும். இந்தியா, அவர்களின் ஏர்போர்ட்டை கட்ட எத்தனிக்கும்போது, இந்தியர்களை எதிர்த்து போராட்டம் நடத்தி ஏர்போர்ட் கட்டுவதை நிறுத்திவிட்டனர், அதை சீனாவுக்கு கொடுத்தனர். பின்பு சீனாக்காரர்கள் சில தீவுகளை சொந்தமாக்கி சூதாட்டம் ஆரம்பிக்கலாமென்று நினைத்து கேட்டபொழுது அவர்கள் சம்மதிக்கவில்லை. தற்பொழுது உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லையென்பதால் இந்தியாவுடன் நட்புறவு மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள். தொடரட்டும், வாழ்த்துகள்


R.RAMACHANDRAN
ஜூலை 29, 2025 07:32

நம் நாட்டு வளங்களை வாரி வழங்கி உலக அளவில் புகழ் பெறுவதற்கு விரும்புபவர்கள் இந்த நாட்டில் நடக்கும் கொடுங்கோல் ஆட்சிகளால் பாதிக்கப்படுபவர்களை ஏறெடுத்தும் பார்ப்பது இல்லை.


N.Purushothaman
ஜூலை 29, 2025 07:23

சீனாவும் தற்போது உதவும் வட்டிக்கு கடன் கொடும் மனநிலையில் இல்லை ....


சாமானியன்
ஜூலை 29, 2025 06:23

மாலத்தீவு அதிபரின் மனமாற்றத்தை வரவேற்கிறேன். நிலையான அமைதி கிடைக்க வாழ்த்துகள் முய்மு.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 29, 2025 04:48

ஆனாலும் மாலத்தீவுக்கு நாம் ஆதரவு கொடுக்கக்கூடாது, டூரிஸ்ட் செல்வதும் கண்டிப்பாக குறைக்க வேண்டும்


முக்கிய வீடியோ