பெங்களூரு: ''தேசியக் கொடியை வெறுக்கும் பா.ஜ.,வினர், பாகிஸ்தான் செல்லட்டும்,'' என, அமைச்சர் பிரியங்க் கார்கே காட்டமாக கூறியுள்ளார்.மாண்டியா கெரேகோடு பிரச்னை குறித்து, தன் 'எக்ஸ்' பக்கத்தில் கர்நாடகா கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கேயின் பதிவு:இவ்வளவு காலமாக மதவாத அரசியலின் ஆய்வகமாக, கர்நாடகா கடலோர மாவட்டங்களை, பா.ஜ., மற்றும் சங்பரிவார் மாற்றியது. இப்போது மாண்டியாவையும் மதவாத அரசியல் ஆய்வகமாக மாற்ற, சோதனை செய்து உள்ளனர். சமுதாயம் அமைதியாக இருப்பதை, பா.ஜ.,வினரால் ஜீரணிக்க முடியாது.மாண்டியா பிரச்னை மூலம், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையை செய்யும், கீழ்மட்ட நிலைக்கு பா.ஜ.,வினர் இறங்கிவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் என்பது கண்ணியமான பதவி. அந்த பதவியின் கவுரவத்தை அசோக் சீர்குலைக்கிறார்.தேசியக் கொடி ஏற்ற அனுமதி வாங்கிவிட்டு, ஹனுமன் உருவம் பொறித்த காவி கொடியை ஏற்ற, சதி செய்தது யார். காவி கொடியை இறக்கிவிட்டு, தேசியக் கொடி தானே ஏற்றப்பட்டு உள்ளது. அதற்கு ஏன் இவ்வளவு கோப்படுகிறீர்கள்?தேசியக் கொடியை வெறுப்பதன் மூலம், பா.ஜ.,வினர் தங்களை துரோகிகள் என்று, நிரூபித்து உள்ளனர். தேசியக் கொடி, அரசியல் சாசனம், நாட்டின் ஒருமைப்பாடு, பா.ஜ.,வினருக்கு பிடிக்கவில்லை என்றால், தங்கள் அன்புக்குரிய பாகிஸ்தானுக்கு அவர்கள் செல்லட்டும்.இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.