பார்லி.,யில் இடையூறுகளால் எதிர்க்கட்சிக்கு தான் நஷ்டம்
புதுடில்லி: “பார்லிமென்டில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகளால், அரசை விட எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக இழப்பு,” என, பார்லிமென்ட் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார். டில்லியில் நேற்று நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகாரத் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு பேசியதாவது: பார்லி., செயல்படாத போது, அதிகாரிகள் நிம்மதி அடைகின்றனர். காரணம், கேள்விகளில் இருந்து அவர்கள் தப்பிக்கின்றனர். பார்லி.,யில் தான் அரசை பொறுப்பேற்க வைக்க முடியும். சபை நடக்கும் போது, அமைச்சர்கள் கடினமான கேள்விகளை எதிர்கொள்கின்றனர். சில நிமிடங்களிலேயே சபை ஒத்தி வைக்கப்படுவதால், எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை. பார்லி.,யில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகளால், அரசை விட எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக இழப்பு. இதை புரிந்து கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுகின்றன. அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் நினைக்கலாம். ஆனால் உண்மையிலேயே, வாய்ப்பை அவர்கள் தான் இழக்கின்றனர். எதிர்க்கட்சி எம்.பி.,க்களை ஒருபோதும் எதிரிகளாக நாங்கள் பார்த்தது இல்லை. அரசியலில் போட்டி இருக்கலாம்; பகை இல்லை. நான் முதன்முதலில் எம்.பி.,யான போது, லோக்சபா சபாநாயகராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் சென்று, 'புகைப்பிடிக்கும் எம்.பி.,க்களுக்காக ஒரு அறை ஏற்படுத்த வேண்டும்' என, கேட்டேன். இதை கேட்டதும் அவர் என்னை திட்டினார். 'உ ங்களுக்கு, சபாநாயகருடனான முதல் சந்திப்பு இது தான். இதை கேட்கவா வந்தீர்கள்?' என கடுமை காட்டினார். அன்றைய தினம், எனக்கு திட்டு விழுந்தது. அப்போது தான், நல்ல நோக்கத்திற்காக அலுவல்களை பயன்படுத்த வேண்டும் என்ப தை கற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார்.