புதுடில்லி: இந்திய விமானப் படையின், 'சி - 130 ஜே' சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம், முதன்முறையாக, 10,500 அடி உயரத்தில் அமைந்துள்ள கார்கில் விமான ஓடுதளத்தில், இரவு நேரத்தில் தரையிறங்கியது.நம் விமானப் படையின், 'சி - 130 ஜே' விமானம், நம் அண்டை நாடான பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, 10,500 அடி உயரத்தில் அமைந்துள்ள கார்கில் விமான ஓடுதளத்தில், சமீபத்தில், இரவு நேரத்தில் தரையிறங்கியது. இந்த தகவலை, சமூக வலைதளத்தில் நம் விமானப் படை தெரிவித்துள்ளது. இந்த விமானம், கார்கில் ஓடுதளத்தில் இதற்கு முன் தரையிறங்கி இருந்தாலும், இரவு நேரத்தில் தரையிறங்கியது இதுவே முதன்முறை ஆகும்.மேம்பட்ட தரையிறங்கும் மைதானங்கள் உட்பட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, அனைத்து விமான நிலையங்களிலும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில், ராணுவ அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக, தவுலத் பெக் ஓல்டி மற்றும் நியோமா விமான ஓடுதளங்களில், உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, 16,700 அடி உயரத்தில், தவுலத் பெக் ஓல்டி விமான ஓடுதளம் அமைந்துள்ளது. இது, உலகின் மிக உயரமான விமான ஓடுதளமாகும். அதே போல், நியோமா விமான ஓடுதளம், 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.