உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்தியில் பிரதமர் பதவி; பீஹாரில் முதல்வர் பதவி காலி இல்லை!; தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பதிலடி

மத்தியில் பிரதமர் பதவி; பீஹாரில் முதல்வர் பதவி காலி இல்லை!; தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பதிலடி

சமஸ்திபூர்: ''மத்தியில் பிரதமராக நரேந்திர மோடி நீடிப்பார்; மாநிலத்தில் முதல்வராக நிதிஷ் குமார் நீடிப்பார். எனவே, பிரதமர் பதவியும் சரி; முதல்வர் பதவியும் சரி; தற்போதைக்கு காலியாக இல்லை,'' என பீஹார் தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீஹார் சட்டசபைக்கு வரும் நவ., 6ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கு நடக்கும் முதல் கட்ட தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில், சமஸ்திபூரில் தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிரசாரம் செய்தார். தர்பங்கா, பெகுசாராய், சமஸ்திபூர் என அடுத்தடுத்து மூன்று இடங்களில் தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டார். அப்போது அமித் ஷா பேசியதாவது: பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., உள்ளிட்ட கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவில்லை. மாறாக, லாலு தன் மகன் தேஜஸ்வியை முதல்வராகவும், சோனியா தன் மகனை பிரதமராகவும் ஆக்க பார்க்கின்றனர். ஆனால், உண்மை என்னவெனில், தற்போதைக்கு இரு பதவிகளுமே காலியாக இல்லை. மத்தியில் பிரதமராக மோடியே தொடர்வார்; அதே போல் மாநிலத்தில் முதல்வராக நிதிஷ் குமாரே தொடர்வார். 'மஹாகட்பந்தன்' கூட்டணி என்பது ஊழல் கூட்டணி. கால்நடை தீவனத்தில் ஊழல், அரசு வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்று ஊழல் என லாலு அடுத்தடுத்த ஊழல்களில் சிக்கி இருக்கிறார். காங்., மீது 12 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் வழக்கு இருக்கிறது. பிரிவினைவாதத்தை துாண்டும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' இயக்கம் பாட்னாவின் புல்வாரி ஷெரிப் பகுதியில் துடிப்பாக இருந்தது. நாடு முழுதும் தேடுதல் வேட்டை நடத்தி அந்த அமைப்பின் உறுப்பினர்களை சிறையில் தள்ளியது தே.ஜ., கூட்டணி அரசு தான். தடை விதித்ததும் அதே அரசு தான். ஒருவேளை பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர்கள் சிறையில் இருப்பார்கள் என நினைக்கிறீர்களா? அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படுவர். வாக்காளர் உரிமை யாத்திரைக்காக சில மாதங்களுக்கு முன் ராகுல் பீஹார் வந்திருந்தார். வாக்காளர் பட்டியலில் ஊடுருவல்காரர்களின் பெயர்கள் இடம் பெற வேண்டும் என்பதே ராகுல் மற்றும் லாலுவின் விருப்பம். அதற்காகவே வாக்காளர் உரிமை என்ற பெயரில் அவர் யாத்திரை நடத்தினார். பீஹாரில் மீண்டும் காட்டாட்சியை கொண்டு வர வேண்டும் என்பது தான் தேஜஸ்வி மற்றும் ராகுலின் நோக்கம். பீஹாரை பொறுத்தவரை தே.ஜ., கூட்டணி என்பது பஞ்ச பாண்டவர்கள் போன்றது. ஐந்து வலிமையான கூட்டணி கட்சிகளை கொண்டது. இந்த தேர்தலில் 'இண்டி' கூட்டணி அடியோடு விரட்டி அடிக்கப்படும். தே.ஜ., கூட்டணி வரலாற்று வெற்றியை பதிவு செய்யும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Abdul Rahim
அக் 30, 2025 09:18

இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் பதவியும் காலியாக இல்லைனு சொல்லும் உங்க புத்திரர் நிலையா உட்க்கார்ந்திருக்கார்னு சொல்லும்....


அப்பாவி
அக் 30, 2025 05:59

மக்களுக்கு குடுக்க ரெண்டு கோடி பதவி ஃப்ரீயா காலியா இருக்கு ஹைன். போய் டில்லு, பிஹார் ல வாங்கிக்கோங்க ஹைன்.


முக்கிய வீடியோ