உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மண்டல பூஜையை ஒட்டி சபரிமலையில் கட்டுப்பாடு தங்க அங்கி இன்று புறப்படுகிறது

மண்டல பூஜையை ஒட்டி சபரிமலையில் கட்டுப்பாடு தங்க அங்கி இன்று புறப்படுகிறது

சபரிமலை:சபரிமலையில் மண்டல பூஜையை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தங்க அங்கி பவனி இன்று ஆரன்முளாவிலிருந்து புறப்படுகிறது.சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. டிச. 26ல் நடைபெறும் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதன்படி டிச. 25-ல் 50 ஆயிரம்பேரும், டிச. 26ல் 60 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இரண்டு நாட்களிலும் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.மண்டல பூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி இன்று காலை 6:00 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து பவனியாக புறப்படுகிறது. டிச. 25 மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் முன் மதியம் 3:00 வரை பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.அதன் பின்னர் தலைசுமையாக சன்னிதானத்திற்கு கொண்டுவரப்படும். மாலை 6:30 -க்கு தங்க அங்கிஅணிவித்து தீபாராதனை நடைபெறும். டிச. 26 மதியம் 12:00 -க்கு நடைபெறும் மண்டல பூஜையிலும் இந்த அங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும்.தங்க அங்கி வருகையை ஒட்டி டிச. 25 மதியம் 1:00 வரை மட்டும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் தங்க அங்கி புறப்பட்டு சன்னிதானம் வந்து சேர்ந்த பின்னரே பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை