ம.ஜ.த.,வை வலுப்படுத்தும் பணி; கனகபுராவில் குமாரசாமி தீவிரம்
ராம்நகர்: ராம்நகர் மாவட்ட அரசியலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, துணை முதல்வர் சிவகுமார் குடும்பங்களுக்கு இடையில், நீண்ட காலமாக நீயா, நானா போட்டி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர், மாகடி, சென்னப்பட்டணா, கனகபுரா ஆகிய நான்கு தொகுதிகளில், சென்னப்பட்டணாவில் மட்டும் ம.ஜ.த., வெற்றி பெற்றது. கனகபுராவில் துணை முதல்வர் சிவகுமார், அபார வெற்றி பெற்றார்.இந்நிலையில் லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட குமாரசாமி வெற்றி பெற்று, எம்.பி., ஆனதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதனால், சென்னப்பட்டணா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. சென்னப்பட்டணாவிலும் வெற்றி பெற்று, ராம்நகர் மாவட்டத்தை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று, துணை முதல்வர் சிவகுமார் நினைக்கிறார். சென்னப்பட்டணாவில் 'நானே வேட்பாளர்' என்றும் அறிவித்து இருக்கிறார்.ஒருவேளை அவர் சென்னப்பட்டணாவில் வெற்றி பெற்றால், கனகபுரா எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும்.அங்கு இடைத்தேர்தல் நடந்தால் தனது தம்பி சுரேஷை, களம் இறக்கவும் சிவகுமார் கணக்கு போட்டு உள்ளார். கனகபுரா தங்கள் கோட்டை என்று, சிவகுமாரும், சுரேஷும் கூறி வருகின்றனர்.இதனால் கனகபுராவில் ம.ஜ.த.,வை வலுப்படுத்த, குமாரசாமி தீவிரம் காட்டுகிறார். ம.ஜ.த., வுக்கு உறுப்பினர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கனகபுரா ஒரு காலத்தில் ம.ஜ.த.,வின் கோட்டையாக இருந்தது. அந்த கட்சி சார்பில் 1985 முதல் 2004 வரை நடந்த ஐந்து தேர்தல்களில் சிந்தியா வெற்றி பெற்றார்.கடந்த சட்டசபை தேர்தலில் சிவகுமார் 1,22,392 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், லோக்சபா தேர்தலில் தனது தம்பி சுரேஷுக்கு, கனகபுரா தொகுதியில் இருந்து பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத்தை விட 25,677 ஓட்டுகள் தான் கூடுதலாக வாங்கி தர முடிந்தது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி சிவகுமாருக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஒருவேளை கனகபுராவில் இடைத்தேர்தல் நடந்தால், பா.ஜ., - ம.ஜ.த., ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற்று, கனகபுராவை கைப்பற்றி விடலாம் என்று, அந்த இரு கட்சியினருக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.