பல்லாரி : கணவருடன் சென்ற இளம்பெண்ணை சேர்த்து வைக்கக்கோரி, கள்ளக்காதலனான லாரி டிரைவர், போலீசில் புகார் செய்துள்ளார்.மஹாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டம், ஜட்டா தாலுகா முகந்தி கிராமத்தின் சித்தோண்டா சவுதாட்டி, 43. லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.தன் கிராமத்தில், மகேஷ் என்பவர் நடத்தும் ரொட்டி கடைக்கு சித்தோண்டா அடிக்கடி சென்றார். அப்போது அவருக்கும், மகேஷின் மனைவி சுஜாதா, 37, என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர்.ஆறு மாதங்களுக்கு முன்பு, சித்தோண்டாவும், சுஜாதாவும் வீட்டைவிட்டு வெளியேறி, பல்லாரிக்கு வந்தனர். வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். மனைவி காணாமல் போனதாக, சாங்கிலி போலீசில் மகேஷ் புகார் அளித்தார். இருவரும் பல்லாரியில் வசிப்பது பற்றி அறிந்த போலீசார், இங்கு வந்து இருவரையும், சாங்கிலி அழைத்துச் சென்றனர்.போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சின்போது, கணவருடன் செல்ல சுஜாதா மறுத்துவிட்டார். இதனால் அவர் சித்தோண்டாவுடன் அனுப்பிவைக்கப்பட்டார். இருவரும் மீண்டும் பல்லாரிக்கு வந்தனர். கேரளாவின் திருவனந்தபுரம், தமிழகத்தின் கன்னியாகுமரி, மதுரை, திருச்சி என்று பல இடங்களுக்கு, இருவரும் சுற்றுலா சென்று வந்தனர்.கடந்த மாதம் 28ம் தேதி, சுஜாதா, தன் கணவருடன், மொபைல் போனில் பேசியுள்ளார். இதுபற்றி அறிந்த சித்தோண்டா தகராறு செய்தார். இதனால் கோபித்துக் கொண்டு, கணவர் வீட்டிற்கு சுஜாதா சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில், சித்தோண்டா காத்திருந்தார். ஆனாலும் அவர் வரவில்லை.கள்ளக்காதலியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி, பல்லாரி மகளிர் போலீசில் நேற்று சித்தோண்டா புகார் அளித்துள்ளார்.