உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்காலத்தில் ஆயுத போர் இருக்காது: சைபர் தாக்குதல் தான்: ராணுவ மந்திரி எச்சரிக்கை!

எதிர்காலத்தில் ஆயுத போர் இருக்காது: சைபர் தாக்குதல் தான்: ராணுவ மந்திரி எச்சரிக்கை!

மோவ்: “எதிர்கால போர்கள், ஆயுத போர்களாக இருக்காது; அதிநவீன தொழில்நுட்பத்துடன் அரங்கேறும் போர் மற்றும் சவால்களை சந்திக்க, நம் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் மோவ் மாவட்டத்தில் ராணுவ கல்லுாரி அமைந்துள்ளது. இங்கு 'போர் உரையாடல்' என்ற தலைப்பிலான மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பங்கேற்றார். ராணுவ படைகளின் செயல்பாடுகள், சவால்கள் உட்பட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி அடைந்திருப்பதை சமீபத்தில் நம்மால் மேற்கொள்ளப்பட்ட, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை நிரூபித்துள்ளது. சைபர் தாக்குதல்களை முறியடிப்பதன் அவசியத்தை, அது நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. ட்ரோன் எதிர்காலத்தில் வரும் போர்கள் வெறும் ஆயுத போர்களாக இருக்காது. சைபர் தாக்குதல்கள், ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள்கள் அடிப்படையில் அவை இருக்கும். அதை சமாளிப்பதற்கான வீரர்கள் மற்றும் ஆயுதக்குவியல்கள் போதுமானதாக இல்லை. நவீன போர்கள் இனி நிலம், கடல் மற்றும் வான்வெளியில் மட்டும் இல்லை, அவை இப்போது விண்வெளி மற்றும் இணையதள வெளியிலும் விரிவடைகின்றன. கடினம் செயற்கைக்கோள் அமைப்புகள், செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் விண்வெளி கட்டளை மையங்கள் அதிகாரத்தின் புதிய கருவிகள். எனவே, இன்று நமக்குத் தேவைப்படுவது தற்காப்புத் தயார்நிலை மட்டுமல்ல, ஒரு முன்முயற்சி உத்தியும் கூட. இன்றைய சகாப்தத்தில், போர்கள் திடீரென கணிக்க முடியாததாக மாறிவிட்டன. எந்த போர் எப்போது துவங்கும், எப்போது முடிவடையும்; எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். நம் ராணுவ படைகள் எந்த சூழலையும் சமாளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில், தொழில்நுட்பம், உத்தி மற்றும் தகவமைப்புத் திறன் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற நாடு உண்மையான உலகளாவிய சக்தியாக வெளிப்படும். தேசிய பாதுகாப்பு ராணுவத்தின் பிரச்னையாக மட்டும் இனி இருக்காது. அது முழு தேசத்தின் அணுகுமுறை பிரச்னையாக மாறும். நாங்கள் யாருடைய நிலத்தையும் விரும்பவில்லை, ஆனால், எங்கள் நிலத்தைப் பாதுகாக்க எந்த அளவிற்கும் செல்லத் தயாராக இருக்கிறோம். சுயசார்பு பாதையில் நாம் உண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். ஆனால், இன்னும் நீண்ட துாரம் முன்னேற வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், ராணுவ தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் மற்றும் கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Tamilan
ஆக 28, 2025 09:02

பல லச்சக்கணக்கான கோடிகளை அந்நியர்களுக்கு கார்போரேட்டு குண்டர்களுக்கு வாரி இறைத்த பின்பு ஞானோதயம் வந்துவிட்டதா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை