உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிராமத்திலிருந்து வந்தாலும் ஜெயிக்க முடியும்!

கிராமத்திலிருந்து வந்தாலும் ஜெயிக்க முடியும்!

தனியார், 'டிவி' நடத்திய பாட்டு போட்டியில், 1 கோடி ரூபாய் பரிசு பெற்றுள்ள, மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி அபிஷேகா: என் அப்பா விவசாய கூலி மற்றும் கொத்தனார் வேலைக்கும் செல்வார். எங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறேன். அரசு பள்ளி மாணவர்களுக்காக, ஓசூரில் நடந்த கலை திருவிழாவில் பங்கேற்று, பாட்டு பாடி பரிசும் வாங்கி இருக்கிறேன். அப்போது ஆசிரியர் ஒருவர், தனியார், 'டிவி சேனல்' நடத்தும், 'சரிகமப' இசை நிகழ்ச்சி குறித்து கூறினார். 'அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவா' என்று அப்பாவிடம் கேட்டதற்கு, 'ஒழுங்கா படித்தால் போதும்' என்று கண்டிப்புடன் கூறி விட்டார். ஆயினும், அழுது அடம் பிடித்து சென்றேன். என் மாமா பணம் கொடுத்து ஊக்கமளித்தார். முதலில் கும்பகோணத்திலும், பின் சென்னையில் நடந்த தேர்விலும் பங்கேற்று தேர்வானேன். அந்த போட்டிக்கு, 'ஆறு மாதங்கள் வெவ்வேறு சுற்றுகள் இருக்கும். ஊருக்கும், சென்னைக்கும் அலைந்து, தண்ணீர் மாறினால் தொண்டை பாதிக்கப்படும். அதனால், சென்னையிலேயே ஆறு மாதங்கள் தங்கணும்' என்று சேனல் தரப்பில் கூறினர். பள்ளியிலும் சிறப்பு அனுமதி கொடுத்தனர். சாப்பாடு, தங்கும் இடம் என எல்லா செலவுகளையும் அந்த தொலைக்காட்சி தரப்பே ஏற்றுக் கொண்டது. முறையாக பாட்டு கற்றுக் கொள்ளாததால், ஒவ்வொரு சுற்றும் மிரட்சியாகவே இருக்கும். ஒரே பாட்டை திரும்ப திரும்ப பாடியபடியே இருப்பேன். ஆனால், மேடை ஏறும்போது எல்லாவற்றையும் மறந்து, 'இது ஒரு வாய்ப்பு' என்ற மனநிலைக்கு வந்து, மகிழ்ச்சியாக பாடுவேன். இறுதி சுற்றில் ஜெயிக்க வேண்டும் என்று, 100 சதவீத உழைப்பு கொடுத்ததில், அதற்கேற்ற பலனும் கிடைத்தது. 1 கோடி ரூபாய் பரிசை ஜெயித்து விட்டதாக, நடுவர்கள் என் பெயரை கூறிய அந்நேரம் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அந்த நிமிடம் என் அம்மா முகம் தான் ஞாபகம் வந்தது. ஏனெனில், இந்த வெற்றிக்காக என்னை விட அதிகம் கஷ்டப்பட்டது அம்மா தான். அப்பா இப்போது மிகவும் சந்தோஷப்படுகிறார். நான் ஜெயித்த பின், எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் அப்பாவை பாராட்டினர்; அது, அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வருங்காலங்களில் அவரை இன்னும் பெருமைப்படுத்துவேன். நல்ல பாடகியாக வர வேண்டும், நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கிராமத்தில் இருந்து வந்தாலும், பெரிய மேடைகளில் எங்களாலும் ஜெயிக்க முடியும் என்பதற்கு, நான் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பேன். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை