உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிந்தவர்கள் சேர்ந்தனர் !  19 ஆண்டுக்கு பின் ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்: மராத்தி தெரியாதவர்களை அடியுங்கள் என ஆவேசம்

பிரிந்தவர்கள் சேர்ந்தனர் !  19 ஆண்டுக்கு பின் ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்: மராத்தி தெரியாதவர்களை அடியுங்கள் என ஆவேசம்

மும்பை: ''ஒற்றுமையுடன் இருக்கவே நானும், ராஜ் தாக்கரேவும் இணைந்து உள்ளோம். மும்பை மாநகராட்சி தேர்தல் மற்றும் மஹாராஷ்டிராவில் நடக்கும் தேர்தல்களில், இனி இருவரும் இணைந்தே போட்டியிடுவோம்,'' என, 19 ஆண்டுகளுக்கு பின், சகோதரர் ராஜ் தாக்கரே உடன் இணைந்த உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா -- தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மராத்தி மற்றும் ஆங்கிலவழி கல்வி பள்ளிகளில், 1 -- 5ம் வகுப்பு வரை ஹிந்தி பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும், மூன்றாவதாக வேறு ஒரு மொழியை கற்க விரும்பினால், அதற்கு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும் என்றும், திருத்தப்பட்ட அரசாணையை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு மஹாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மஹாராஷ்டிராவில், 19 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த உத்தவ் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர், மும்மொழி கொள்கை மற்றும் ஹிந்தி திணிப்பு விவகாரத்தில், 'ஈகோ'வை விட்டு விட்டு இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் மும்பையில் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்கிடையே, மும்மொழி கொள்கை விவகாரத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அது தொடர்பான உத்தரவை பா.ஜ., கூட்டணி அரசு திரும்ப பெற்றது. இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என, உத்தவ் - ராஜ் தாக்கரே அறிவித்தனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், மும்பையின் வோர்லியில் உள்ள பிரபல தனியார் அரங்கில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. இதில், உத்தவ், அவரது மகன் ஆதித்ய தாக்கரே, ராஜ், அவரது மகன் அமித் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், மேடையில் உத்தவ் - ராஜ் தாக்கரே மட்டுமே அமர்ந்திருந்தனர். 19 ஆண்டுகளுக்கு பின், இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றியதை பார்த்து, அவர்களின் கட்சி தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

பா.ஜ.,வுக்கு ஏமாற்றம்

ராஜ் தாக்கரே பேசியதாவது:மஹாராஷ்டிராவில் இருந்து மும்பையை பிரிக்கவே பா.ஜ., அரசு மும்மொழி கொள்கையை அறிமுகப்படுத்தியது. ஒட்டுமொத்த மாநிலமும் கொந்தளித்ததால், அதை திரும்ப பெற்று விட்டது. 19 ஆண்டுகளுக்கு பின், உத்தவ் தாக்கரே உடன் இணைந்துள்ளேன்; மேடையை அவருடன் பகிர்ந்துஉள்ளேன். இதற்கு காரணம், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தான். எங்களை ஒன்றிணைக்க பால் தாக்கரே எவ்வளவோ முயன்றார். அவரால் கூட முடியாததை தேவேந்திர பட்னவிஸ் செய்து விட்டார். மொழியை வைத்து மக்களை பிளவுபடுத்தி விடலாம் என நினைத்த பா.ஜ.,வுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதால், ஜாதியை வைத்து மக்களை பிளவுபடுத்த அக்கட்சி முயற்சிக்கும். நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

சமரசம் செய்யவில்லை

என் மகன் ஆங்கில வழிக்கல்வியில் படித்ததாக பலர் கூறுகின்றனர். தென் மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், பிரபலங்கள் ஆங்கில வழிக்கல்வியில் படித்தாலும், தமிழ், தெலுங்கு என அவர்களின் தாய்மொழியை விட்டுக் கொடுப்பதில்லை.பால் தாக்கரே ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் படித்தார்; ஆங்கில செய்தித்தாளில் பணியாற்றினார். ஆனால், மராத்தி மொழிக்கான மரியாதை விஷயத்தில் அவர் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை. மஹாராஷ்டிராவில் குஜராத்தியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, மராத்தி தெரிந்திருக்க வேண்டும். மராத்தி பேசாவிட்டால் அடிக்க வேண்டாம். ஆனால், மராத்தி தெரியாதது போல் நாடகமாடினால், அவர்களை காதுகளுக்கு கீழ் அடியுங்கள். இதை வீடியோ எடுக்க வேண்டாம். அடி வாங்கிய நபர், அதை சொல்லட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

முடிவு கட்டுவோம்

உத்தவ் தாக்கரே பேசியதாவது:மஹாராஷ்டிர மக்கள் மீது ஹிந்தி திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மாநிலத்திற்கு எந்த தீங்கு வந்தாலும் அதை எதிர்த்து போராடுவோம். ஒற்றுமையுடன் இருக்கவே நானும், ராஜ் தாக்கரேவும் இணைந்துள்ளோம். எந்த பிரச்னையாக இருந்தாலும் இணைந்தே எதிர்கொள்வோம். மும்பை மாநகராட்சி தேர்தல் மற்றும் மஹாராஷ்டிராவில் நடக்கும் அனைத்து தேர்தல்களையும் இணைந்தே சந்திப்போம். மஹாராஷ்டிராவில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பா.ஜ., முயற்சிக்கிறது. அவர்கள் அரசியலில் வியாபாரம் செய்பவர்கள். டில்லியின் அடிமையாக உள்ளவர்கள் நம்மை ஆளுகின்றனர். இதற்கு விரைவில் முடிவு கட்டுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

பொறாமை!

ராஜ் - உத்தவ் தாக்கரேயை ஒன்று சேர்த்ததற்காக பால் தாக்கரே என்னை ஆசிர்வதிப்பார். தாய்மொழிக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் இருவரும், நிகழ்ச்சியில் மராத்தி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆட்சி, அதிகாரத்தை மீண்டும் பெறுவது குறித்தே பேசினர். அவர்களின் பேச்சு, துக்க வீட்டில் அழுவதை போல் இருந்தது. பா.ஜ., அரசின் வளர்ச்சிப் பணிகளால் ராஜ் - உத்தவ் தாக்கரே பொறாமை அடைந்துள்ளனர். - தேவேந்திர பட்னவிஸ் மஹா., முதல்வர், பா.ஜ.,

பிரிந்தது ஏன்?

பால் தாக்கரேயின் இளைய சகோதரரின் மகனான ராஜ் தாக்கரே, சிவசேனாவில் இருந்து 2006ல் வெளியேறினார். கட்சியில் உத்தவ் தாக்கரேவுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய அவர், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை துவக்கினார். தற்போது, 19 ஆண்டுகளுக்கு பின் உத்தவ் உடன் அவர் இணைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Iyer
ஜூலை 06, 2025 04:58

தோல்விக்கு மேல் தோல்விகளை கண்டு இந்த இருவருக்கும் கிலி பிடித்துவிட்டது. இனியாவது அரசியலில் பிழைக்கவேண்டுமென்றில் சேர்ந்திருப்பதே ஒரே வழி என்று புரிந்துகொண்டார்கள். உத்தவ் அடித்த பல கொள்ளைகளை பற்றி AMIT SHAH நன்கு அறிவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை