புதுடில்லி:'உள்நாட்டுக்குள் இருந்தபடி செயல்படும் பயங்கரவாதிகளால், நமக்கு மிகப்
பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்
கூறினார்.மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:இந்தியன் முஜாகிதீன் போன்ற, உள்நாட்டுக்குள் இருந்தபடி செயல்படும்
அமைப்புகளால், நமக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படுகிறது. பல்வேறு
விதமாக இவர்கள் செயல்படுகின்றனர். குண்டுகளை தயாரிப்பதிலும், அவற்றை, ஒரு
இடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும், அவர்கள்
திறமையாக செயல்படுகின்றனர்.மும்பையில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து,
மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படையினருக்கு, சில முக்கிய ஆதாரங்கள்
கிடைத்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தேன். மும்பை போலீசார் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அப்படி கூறினேன்.
அதற்குப் பின், மும்பை குண்டு வெடிப்பு விசாரணை குறித்த தகவல்கள் எதையும்,
அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. குண்டு வெடிப்பு பற்றிய விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது என்பதை மட்டுமே தற்போது கூற முடியும். கடந்த 2010ல் புனேயில் நிகழ்ந்த குண்டு வெடிப்பும், சமீபத்தில் மும்பையில்
நிகழ்ந்த குண்டு வெடிப்பும், சந்தேகத்துக்கு இடமில்லாமல், பயங்கரவாதிகள்
நிகழ்த்திய சம்பவங்கள் தான். மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது,
தொலைபேசி இணைப்புகள் செயல்படவில்லை என, தகவல்கள் வெளியாகியுள்ளன. என்னைப் பொறுத்தவரை, இதுபோன்ற தகவல்கள், மிகைப்படுத்தி கூறப்படுகின்றன.குண்டு வெடிப்பு நடந்த, அடுத்த 15 நிமிடங்களில், போலீசார் சம்பவ இடத்துக்கு
சென்று விட்டனர். ஒரு மணி நேரத்துக்குள், காயமடைந்த அனைவரும், அங்கிருந்து
அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால், நார்வேயில் சமீபத்தில் நடந்த தாக்குதலின் போது, சம்பவம் நடந்து, 90
நிமிடங்களுக்கு அப்புறம் தான், போலீசார் அங்கு செல்ல முடிந்தது. போலீசாரை
விமர்சனம் செய்வதற்கு முன், நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.கடந்த 1990களில், காஷ்மீரில் இருந்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு
எல்லை தாண்டிச் சென்ற இளைஞர்களை, மீண்டும் காஷ்மீருக்குள் அனுமதிப்பது
குறித்து கேட்கப்படுகிறது. இது மிகவும் சிக்கலான பிரச்னை. இந்த
பிரச்னைக்கு, அரசு தீர்வு காண முயற்சிக்கும்.கடந்தாண்டு காஷ்மீரில் நடந்த வன்முறைகளின் மூலம், பிரச்னையை எப்படி கையாள
வேண்டும் என, மாநில அரசு பாடம் கற்றுக் கொண்டுள்ளது. எனவே, கடந்தாண்டை விட
இந்தாண்டில், இந்த பிரச்னை சிறப்பாக கையாளப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து, இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகள், தொடர்ந்து
அதிக அளவில் நடந்து வந்தாலும், சில ஊடுருவல்கள் தான் வெற்றி பெறுகின்றன.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.