உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.75 லட்சம் கொள்ளை நாடகம் நகை வியாபாரி உட்பட மூவர் கைது

ரூ.75 லட்சம் கொள்ளை நாடகம் நகை வியாபாரி உட்பட மூவர் கைது

பெலகாவி: காரை வழிமறித்து, துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்ததாக, பொய் புகார் கொடுத்தவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தங்க வியாபாரி சூரஜ் ஹோனமானே. இம்மாதம் 15ம் தேதி கோலாப்பூரில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தார். பெலகாவி ஹுக்கேரி தாலுகா ஹரகாபூர் அருகே வந்தபோது, இரு நபர்கள் காரை வழிமறித்து, துப்பாக்கி முனையில் மிரட்டி, காரில் இருந்த 75 லட்சம் ரூபாயுடன் காரை கொள்ளையடித்துச் சென்றதாக, சங்கேஸ்வர் போலீசில் சூரஜ் புகார் செய்தார்.போலீசார் விசாரணையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கார், பெலகாவி மாவட்டம், நெர்லி கிராமம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த காரை ஆய்வு செய்த போது, முன் சீட்டுக்கு அருகில், புதிதாக உருவாக்கி வைத்திருந்த ரகசிய பெட்டியில் இருந்த, ஒரு கோடி ரூபாயை கைப்பற்றினர். இது பற்றி, சூரஜிடம் விசாரித்தனர்.அவரோ, 'ஒரு கோடி ரூபாய் பற்றி எனக்கு எதுவும் தெரியாது; வியாபாரிகள் கொடுத்த பணத்தை சரியாக எண்ணவில்லை' என, கூறியுள்ளார். இதனால், போலீசார் சந்தேகம் அடைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.மாவட்ட எஸ்.பி., பீமா சங்கர் குலேடா கூறியதாவது: கேரளாவைச் சேர்ந்த பாரத் என்ற நபர், தன் நகைகளை விற்றுத் தருமாறு, சூரஜிடம் கொடுத்துள்ளார். அவர், நகைகளை விற்று பணம் பெற்றுக் கொண்டார். பணத்தை பார்த்த பின், அவர் மனது அலை பாய்ந்தது. தன் நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை அபகரிக்க திட்டம் வகுத்தார். இதற்காக கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டவுடன், விஷயம் தெரியவந்தது. பொய் புகார் கொடுத்த சூரஜ், டிரைவர் ஆரிப் ஷேக், அஜய் சர்காரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஒரு கோடி ரூபாயை எடுத்து வந்ததால், காரின் உரிமையாளர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ